அலுவலக அலப்பறைகள்
சுகவனம் பணிபுரியும் நிறுவனம் முழுவதும் கார்ப்பரேட் ஆகாத, கிட்டத்தட்ட கார்ப்பரேட் வகையை சார்ந்த ஒரு கார்ப்பரேட் அல்லாத கார்ப்பரேட் நிறுவனம்.அந்த நிறுவனத்தில் சேர்ந்து 15 வருடங்கள் பூர்த்தி செய்துவிட்டார், கனவிலும் அவர் வேறு நிறுவனத்தை நினைத்து பார்க்கவில்லை,
அவரை எப்படியாவது நிறுவனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பலதரப்பட்டவரும் முயற்சித்துவிட்டனர் ...
ம்... ஹூம் ... யாருக்கும் பலனில்லை... ஏமாற்றம் மட்டுமே....
புதிதாக பணிக்கு சேர்பவர்களிடம் கூட எந்த பாரபட்சமும் காட்டமாட்டார், சகஜமாக பழகுவார்.... புதிதாக பணியில் சேர்பவர்களின் சம்பளத்தை அறிந்துகொண்டு...
''ம்... இந்த சம்பளம் வாங்க எனக்கு 10 வருஷம் ஆச்சு... வந்ததுமே உங்களுக்கு எடுத்து கொடுத்துட்டாங்க... அப்புறம் எப்படி வேலை செய்வீங்க...'' என்பார்
அவர் சொல்வது உண்மை என்பதற்கு சான்றாகவே புதியவர்களின் செயல்பாடுகளும் இருக்கும்....
சுகவனத்திற்க்கு அனுபவ அறிவு அதிகம் ....
ஒரு நாள் அவரது மேலதிகாரி தனது அறைக்கு வரும்படி இண்டர்காம் வழியாக அழைத்தார்....
இண்டர்காம் மணியடித்ததுமே.... அலறியடித்துக்கொண்டு ரிஸீவரை தலைகீழாக எடுத்து வைத்துக்கொண்டு பேசினார்...
எப்படியும் மேலதிகாரி தன்னைத்தான் அறைக்கு அழைப்பர் என்பது தெரிந்திருந்ததால்....
"எஸ் மேடம்... கமிங் மேடம்...." என்று முடித்துக்கொண்டார் ..
ரிஸீவரைவைக்கும் போது, அதை சரியாக வைக்க முடியவில்லை..., அது தலைகீழாக இருந்ததால்...
அருகிலிருந்த சக ஊழியரான ரவியிடம்...
"என்னடா போன் இது... சரியாய் கேட்கவுமில்லை.... வைக்கவும் முடியல.... இதை மாத்தசொல்லக்கூடாதா..." என்று கடிந்து கொண்டார்....
தான் எவ்வித தன்மையில் இருக்கிறோம் என்று பிறர் கண்டறியா வண்ணம் தனது முகத்தை வைத்திருப்பது ரவியின் தனிச்சிறப்பு....
இருப்பினும் சுகவனத்தின் அத்தனை சேட்டைகளை பார்த்தபின் ரவி கோபத்தின் எல்லையை அடைந்துவிடுவார்...
"அறிவிருக்கா.... ஏன் அப்படி பதட்டப்படறே... போனை எப்படி எடுக்கறேன்னு கூட தெரியாம.... என்கிட்ட எதுக்கு கத்தற...." என்று 2 அடி தள்ளி இருப்பவர்களுக்கு கூட கேட்காத வண்ணம் சுகவனத்தை திட்டினார் ரவி...
அந்தளவிற்கு தனது குரல் ஒலியை வைத்திருப்பர்....
ஆனால் சுகவனம் பேசினால்... அலுவலகத்திற்கு வெளியிலும் கேட்கும்.... யாராவது அடக்கினால்... "நான் என்ன சதித்திட்டமா தீட்டறேன்... மெதுவா பேச.... உண்மையை பேசுறேன்... உரக்கத்தான் பேசுவேன்" என்பார்...
அவரது மேலதிகாரியான ரஞ்சனியை பார்த்துவிட்டால் போதும்....
அவரது உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகள் அவரது காதுகளுக்கே எட்டாது...
சப்த நாடிகளும் ஒடுங்கிவிடும்...
ரவி டென்ஷன் ஆனதும் சுகவனம் சந்தோஷமாகிவிடுவார்...
"சரி விட்றா.... நா வேலை அவசரத்தில் இருக்கேன்.... நீ சும்மாதானே உட்கார்ந்திருக்கே.... அதான் எல்லாத்தையும் கவனிக்கிறே..." என்று மேலும் ரவியை சீண்டுவார் சுகவனம்.
ரவிக்கு மேலும் டென்ஷன் ஏறும்... ஒருவகையில் உண்மையை, அலுவலகம் அறிய சொல்லிவிட்டான் என்று... தனது நாற்காலியை விட்டு எழுந்து.... வெளியே சென்றுவிடுவார்....
எப்படியும் சுகவனம் ரஞ்சனியிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் ஓயமாட்டான் என்று தெரியும்... பிறகு வரலாம் என சென்றுவிடுவார்....
இன்டர்காம் போனை தலைகீழாக வைத்துப் பேசியதில் ரஞ்சனி கேட்ட "ரிப்போர்ட்" சுகவனத்தின் காதில் விழவில்லை...
அதையறியாமல் ரஞ்சனியின் அறையை நோக்கி வீரநடை போட்டுச் சென்றார் சுகவனம்....
மேலதிகாரியான ரஞ்சனியின் அறை தளம் முதல் தரையை நோக்கி பாதிவரை கண்ணாடியாலும் மீதம் பிளைவுட்டாலும் அமையப்பெற்றிருந்தது...
பாதி கண்ணாடியும்... பாதி பிளைவுட்டும் கொண்ட அறையின் கதவருகே நின்றுகொண்டு தனது தொண்டையை ஒரு கையால் மூடி கணைத்து சரி செய்துகொண்டே அறையினுள் நுழைய அனுமதி கேட்டார்...
"கம் இன்..." என்றாள் ரஞ்சனி தனக்கே உரித்தான கனீர் குரலில்....
சுகவனத்திற்கு கை கால்கள் உதற ஆரம்பித்துவிட்டது...
"மேடம்... கூப்டீங்க..." என்றார் தயங்கியபடி...
"என்ன நீங்க மட்டும் வர்றீங்க...
நான் கேட்ட ரிப்போர்ட் பின்னாடி தனியா வருதா?...
இல்ல நீங்க போயி அனுப்பி வைப்பீங்களா"
என்றார்... நையாண்டியும், கோபமும், ஆதரவும் நிறைந்த குரலில்...
ஏற்கனவே பதட்டத்தின் உச்சத்தில் இருந்த சுகவனம் விழிபிதுங்கி... ரெக்வஸ்ட் செய்வதா... இல்லை மன்னிப்பு கேட்பதா... இல்லை அப்படியே ஓடிவிடுவதா... என்ற குழப்பத்தில் சிரித்துவிட்டார்...
ரஞ்சனி ஏதோ நல்ல மூடில் இருந்ததால் தப்பித்துவிட்டதாக சுகவனமும்... அறைக்குள் நடப்பதை உண்ணிப்பாக பார்த்துக்கொண்டிருந்த அலுவலக ஊழியர்களும்...
"போங்க... போயி எடுத்துட்டு வாங்க" என்றாள் ரஞ்சனி...
அப்பாடா... என்று புன்னகையுடன் வெளியே வந்தார் சுகவனம்...
புன்னகை மாறாமல்.... நேரே அவரது அறைக்கு சென்றவர்... ரஞ்சனி இப்படி கோபமின்றி இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று... அவளது அழகை மனதிற்குள் ரசித்தவாறே தன் மேஜை மீதிருந்த காகிதத்தை, அவள் கொண்டுவரச் சொன்ன ரிப்போர்ட் என நினைத்து கையில் எடுத்தார்...
நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த சபாபதி அந்த அலுவலகத்தின் மற்றொரு பழமையான ஊழியர், சுகவனத்தைவிட அதிக ஆண்டுகளாக அங்கே பணிபுரிந்து வருகிறார்... சுமார் 18 ஆண்டுகள் இருக்கும்....
- சபாபதி - எளிதாக சுகவனத்தின் மனதைப் படித்துவிடுவார்...
"பாத்து சுகவனம்... மனசை மேயவிட்டுக்கிட்டே ரிப்போர்ட்டுக்கு பதிலா வீட்டு வரவு செலவு கணக்கை கொண்டுபோயி கொடுத்து வாங்கி கட்டிக்காதீங்க" என்று எச்சரித்தார்...
வாழ்வில் மற்றவர்கள் சொல்வதை நாம் அவ்வளவு எளிதில் உதாசினப் படுத்தக்கூடாது...
ஏனெனில் விரைவிலேயே... "ச்சே அவர் கூட சொன்னார்.. கொஞ்சம் கேட்டிருக்கலாம்" என்று சிக்கிய பிறகு எண்ணத் தோன்றும்... பிரயோஜனம் இல்லை.... அனுபவித்தே ஆக வேண்டும்...
அன்று சுகவனமும் அவ்வித அனுபவத்தைப் பெறுவதற்காகவே... நிகழ்ச்சிகள் கச்சிதமாக அரங்கேறிக்கொண்டிருந்தன...
சபாபதியின் வார்த்தைகளை துச்சமென மதித்து, மிதித்துவிட்டு ரிப்போர்ட் எனக் கருதி... சபாபதி சொன்னது போலவே, அவரது வீட்டுக் கணக்கை கையில் ஏந்திச் சென்றார்... கைமேல் பலன் அவருக்கு காத்திருந்தது...
இம்முறை குரலை சரி செய்ய முயற்சிக்காமல்...
சற்றும் கதவருகே தாமதப்படுத்தாமல் சரேலென உள்ளே நுழைந்தார்....
"மேடம்..." என்று தான் கொண்டு சென்ற ரிப்போர்ட்டை ரஞ்சனியின் டேபிள் மீது பரப்பினார்...
கையில் தொடாமலே பேப்பரை பார்த்த ரஞ்சனிக்கு லேசாக வேர்த்தது... டம்ளரில் இருந்த தண்ணீரைப் பருகினாள்...
ஆசுவாசப்படுத்திக்கொண்டு ரிப்போர்ட்டை கையில் எடுத்துக்கொண்டு தனது புஷ்பேக் சேரில் சாய்ந்தவாறு பொறுமையாக பார்த்தாள்...
அவளது கண்கள் அகன்று விரிந்தது.... கோபக்கணையை கக்கியது...
நிமிர்ந்து சுகவனத்தை பார்த்தாள்...
ஆணியடித்தாற்போல் நின்றிருந்தார் சுகவனம்...
ரஞ்சனியின் செய்கையைப் பார்த்தவுடனேயே... ஏதோ தவறு இருப்பதை புரிந்து கொண்டார்... சுகவனம்...
அனால் முற்றிலும் தவறு என்பதை அதுவரை அறியவில்லை...
ஒரு க்ஷணம்... என்ன நடந்ததென்றே யாராலும் யூகிக்க முடியவில்லை...
அறைக்குள் சுகவனம் எடுத்துச் சென்ற காகிதம் ஜென்ம சாபல்யத்தை அடைந்து தூள் தூளாக சிதறி ஆகாயத்தில் கலக்க முயற்சிக்க..
ரஞ்சனியின் அனல் பறக்கும் குரலில் "GET... OUT..." என்று குறைந்தபட்சம் 110 டெசிபளில் அலறினாள்... இரண்டு நிகழ்வும் ஏக காலத்தில் நடந்தேறியது...
அலுவலகமே அந்த ஒரு நொடி பொழுது ஸ்தம்பித்து நின்றது...
அனைவருமே...
அடேங்கப்பா... இப்படி ஒரு அனுபவத்தை நம்மாள அனுபவிக்க முடியாதுப்பா.... சுகவனம் ஒருத்தனால மட்டும்தான் முடியும்... இதுக்காகவாவது சுகவனம் இங்கேயே இருக்கனும் என ஏக காலத்தில் நினைத்தனர்...
கதவை திறந்து கொண்டு சுகவனம் பரிதாபமான முகத்துடன் அக்கம் பக்கம் பார்க்காமல் நோராக தனது இருக்கையை நோக்கி நடந்தார்...
அவர் அப்படி நடக்க காரணம் வருத்தம் அல்ல... அக்கம் பக்கம் பார்த்தால் சுகவனம் சிரித்துவிடுவார்... அவ்வளவுதான் சிரிப்பு வராதவர்கள் கூட வற்புறுத்தி சிரித்து மீண்டும் ரஞ்சனியின் கோபத்திற்கு ஆளாக்கிவிடுவார்கள்...
தனது இருக்கையை நோக்கி வந்து இருக்கையில் அம்ர்ந்ததும்..., அவ்வளவுதான்... எவ்வளவுக்கு எவ்வளவு சத்தமில்லாமல் சிரிக்க முடியுமோ அவ்வளவிற்கும் சத்தத்தை அடக்கிக் கொண்டு சிரித்து சிரித்து கண்களில் தண்ணீரே வந்து விட்டது... சத்தத்தை அடக்கிக் கொண்டு சிரித்ததால் நெஞ்சு அடைப்பது போல் ஓர் உணர்வு... படிப்படியாக சிரிப்பை குறைத்துக்கொண்டார்...
அவருக்கு ஜூனியராக பணிபுரியும் விஜய், சிரிப்பை அடக்கிக் கொண்டு
"என்ன சுகவனம் நான் ரெடி ரிப்போர்ட் இங்க இருக்க... நீங்க எதைக் கொண்டு போனீங்க"... என்றான்
"நா ரெடி பண்ணதை எடுத்திட்டுப் போனேன்" என்றார் சுகவனம்
"நீங்க வேற ரெடி பண்ணீங்களா..." எனக் கேட்டான் விஜய்
"ஆமாண்டா.. எங்க வீட்டு வரவு செலவு கணக்கை நான்தானே ரெடி பண்ணனும்..." எனறார் சுகவனம்...
"அடப்பாவி...." என்றான் விஜய்....
"இந்த சாக்குல அடா..புடான்னாதே.... நான் உன்னைவிட 10 வருஷம் பெரியவன்..." எனறார் சுகவனம்...
"ம்... அதனாலதானே நீங்க உள்ள போயி அந்த அம்மாகிட்ட பேசிட்டு வர்றீங்க" என்றான் நக்கலாக...
"டென்ஷன் ஆயிட்டாங்கடா... 30 லட்சம் எதிர்பார்த்த இடத்துல 30 ஆயிரம்...."
மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார் சுகவனம்...
"எனக்கு வருத்தமே எதனாலன்னா... ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெணட் போட்டு, என் பொண்டாட்டி கண்டுபிடிக்காத மாதிரி வரவு செலவு கண்க்கை 2 நாளா உக்கார்ந்து ரெடி பண்ணேன்... அதை கிழிச்சுப் போட்டுட்டாங்க... திரும்பவும் அதே மாதிரி அட்ஜஸட் பண்ண தெரியாது... கண்டிப்பா இந்த மாசம் வீட்டுக்காரிக்கிட்டயும் மாட்டப்போறேன்னு நல்லா தெரியுது..." என்ற சுகவனம், தொடர்ந்தார்....
"அதென்ன கெட்ட பழக்கம்... கிழிச்சுப் போடறது...
எனக்கு வேணாம்னா... நான் என்ன கிழிச்சா போடறேன்... உன் டேபிள்லயோ... இல்ல ரவி டேபிள்லயோ... போட்டுடறேன்... நீங்க அதை எப்படி பிரிகணுமோ அப்படி பிரிச்சு அடுக்கப்போறீங்க..." என முடித்தார்
இதைக் கேட்ட ரவி...
"அடப்பாவி... அதானா சம்மந்தமே இல்லாம இந்த ரிப்போர்ட் பேப்பரெல்லாம் என் டேபிள்ல....... அடச்சே....... அதவேற மெனக்கெட்டு சனிக்கிழமை மதியம் வீட்டுக்குப்போகாம அடுக்கி வைச்சேனே... ச்சே..." என்று புலம்ப
"வெரி குட்... அடுக்கி வைச்சியா... அப்படித்தான் பொறுப்பா இருக்கனும்" என்று ரவியை மேலும் வெறுப்பேற்றினார் சுகவனம்....
"சரி சரி அந்த ரிப்போர்ட் பேப்பரை கொடு" என சொல்லி
அப்படியே விஜய் கொடுத்த ரிப்போர்ட் பேப்பரை வாங்கி சரிபார்க்காமல் ரஞ்சனி அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் சுகவனம்...
கதவருகே சென்று இது ரிப்போர்ட் பேப்பர்தானா என்று ஒரு முறை அதன் தலைப்பை பார்த்தார்... சரி ரிப்போர்ட்தான் என உறுதி செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார்...
கதவை திறக்காமல் உள்ளே ரஞ்சனியின் டேபிள் மீதி பரவியிருந்த மதிய உணவைப் பார்த்து... ச்.சே... அவசரப்பட்டு வந்துட்டோமே... என நினைத்துக் கொண்டு திரும்பி தனது அறைக்கு சென்று... ரிப்போர்ட்டை தனது டேபிளின் மீது வைத்துவிட்டு... கைகளை கழுவிக்கொண்டு வர சென்றார்..
திரும்ப வந்து... என்னடா விஜய் சாப்பிடலாமா என்றார்....
சபாபதி வந்தார்... அவருக்கு எப்போதுமே... சுகவனத்தின் மீது அன்பு அதிகம்... அவருடைய அன்பு சுகவனத்திற்கு சுகத்திற்கு பதில் அவஸ்தையையே பலமுறை கொடுத்திருக்கிறது...
இருப்பினும் சபாபதி மீது சுகவனத்திற்கு அதீத மரியாதையுண்டு...
"என்ன சுகவனம் அவ்வளவு சத்தத்தை எப்படி கேட்டடீங்க காது அதிர்ந்து போயிருக்குமே" என்றார் சபாபதி....
"பிஸிக்கலி பிரஸண்ட்... மென்டலி ஆப்சண்ட்..."...
அதாவது என்று ஆரம்பித்து கவிதை நடையில் விவரித்தார் சுகவனம்...
புறக்காதுகள் பெரும்பாலும் கேட்கும் திறனை இழந்திருந்தன...
புறக்கண்கள் பெரும்பாலும் பார்க்கும் திறனை இழந்திருந்தன...
வாய் முற்றிலும் செயலற்று இருந்தது...
எனது மனம் சிந்தனையற்று இருந்தது...
எனது அறிவு.... என்று சொல்லப்போன சுகவனத்தை மறித்த சபாபதி
"அது இருக்கிறவங்கதான் அதப்பத்தி பேசணும்... நாம எதுக்கு சம்பந்தமில்லாம அதப்பத்தி பேசிக்கிட்டு..." என்று முடித்துவிட்டு சென்றார் சபாபதி...
எதிர்பாராத இந்த தாக்குதலிலிருந்து விடுபட எண்ணிய சுகவனம் தனது டிபன் கேரியரைப் பிரித்தார்....
சுகவனம் சாப்பாட்டுப் பிரியர் கூட... ரசித்து... ருசித்து முடித்ததார்...
"உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு" என்று சொல்லிவிட்டு... மேஜையின் மீது கைகளை மடக்கி வைத்துக்கொண்டு சாய்ந்துவிட்டார்..
அலுவலகத்தில் சுகவனம் உறங்குவதில்லை இருந்தாலும் கண்களை மூடி அடுத்த காட்சிக்கு தன் மனதை ஆயத்தப்படுத்தும் விதமாக.... 30 நிமிடம் கழித்து என்ன செய்யவேண்டும்... எப்படி செய்யவேண்டும் என்ற கற்பனையோடு இருப்பார்...
கண் விழித்ததும் கற்பனை கலைந்து போய்விடும்...
வழக்கம்போல பதற்றத்துடன் இயங்க ஆரம்பித்துவிடுவார் சுகவனம்....
என்றாவது ஒரு நாள் தான் கற்பனை செய்தவாறே நடக்க வேண்டுமென அவர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்...
தொடரும்...