Tuesday, 15 January 2019

மிஸ்டர் சுகவனம் - பாகம் 11

சுகவனத்தின் "உணவக கலாட்டா"

இரண்டு நாட்கள் கழித்து... அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த சுகவனத்தைப் பார்த்த வினோத்...

"என்ன சுகவனம் ஸ்மார்ட் ஃபோனுக்கு மாறிட்டீங்க போல..." என்றான்  நக்கலாக சிரித்துக்கொன்டே...

"அதை ஏன்டா கேக்குற... நம்ம எதிர்பார்ப்பை எடுத்து சொன்னா ஒருத்தனுக்கும் புரியல... தவிரவும்,

நாம என்னதான் தேடி தேடி... நல்லா விசாரிச்சு வாங்கினாலும்...
"இப்படி ஒரு ஃபோனை வாங்கவா இவ்ளோ செலவு பண்ணீங்க...
ஒரு ஃபோனை கூட ஒழுங்கா பார்த்து வாங்க தெரியலையே உங்களுக்குன்னு... சரமாரியா கேள்வி கேப்பா...

நம்ம மனசுல தோணும்... பொண்டாட்டிய கூடத்தான் ஒழுங்கா செலக்ட் பண்ண தெரியலேன்னு...
ஆனா வெளியில சொல்லக்கூடாது... சிரிக்கவும் கூடாது...
கம்முனு கேட்டுக்கணும்...

இதுவே ... அவளா பார்த்து ஒரு ஃபோனை வாங்கி கொடுத்தா ....
என்னமோ உலகத்திலேயே உன்னதமான ஃபோனை வாங்கி கொடுத்திட்ட மாதிரி பெருமை பேசுவா...

அதனால...அவ பொறுப்பிலேயே விட்டுட்டேன்... கடைசியா நான் எதை வேணாம்னு சொன்னேனோ அதே "Telkon - 'U will feel" (டெல்கான் - யூ வில் ஃபீல்) மொபைல் ஃபோன்தான் வாங்கி கொடுத்தா... கேட்டா இதுலதான் ரேடியேஷன் கம்மியா இருக்குங்கறா ... "விதி வலியாதுடா" வினோத்...."என்று முடித்தார் சுகவனம்...

சிரித்துக்கொண்டே நகர முயன்ற வினோத்திடம்...
"வினோத் இன்னைக்கு நைட் உங்ககூட ஹோட்டல்லதான் சாப்பாடு...." என்றார் சுகவனம்

"ஏன் என்னாச்சு... வீட்ல துரத்தி விட்டுட்டாங்களா..." என்றான் வினோத் கண் சிமிட்டியபடியே...

"ம்... அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை... நான் இல்லாம, அதுவும் என்னை திட்டாம அவளால ஒரு நாள் கூட இருக்க முடியாது.... அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா... இப்போ கூட புது ஃபோன் எதுக்குன்னா... பழைய ஃபோன்ல சரியா கேக்கமாட்டேங்குதுன்றதை கண்டுபிடிச்சுட்டா..." என்றார் சுகவனம்

"எப்படி" என கேட்டான் வினோத்...

"வழக்கமா அவ ஃபோன் பண்ணினா, ஏதாவது வாங்கிட்டு வர சொல்லுவா இல்லனா திட்டுவா... அதனால நான் எப்பவுமே அவ திட்ட ஆரம்பிச்சதும்... ஃபோனை கீழ வச்சுட்டு... 'ம்.. ம்ஹும்...' மட்டும் தான் சொல்லுவேன்...
அவளே பேசிட்டு கட் பண்ணிடுவா... எப்பவுமே என் பதிலே எதிர்பார்க்கமாட்டா...

இவ  ஒரு முறை...
'நான் என்ன லூசா'ன்னு கேட்டிருக்கிறா போல...

நான் வழக்கம்போல 'ம்...' சொல்லிட்டிருக்கிறேன்...


நம்ம நேரம் அப்படி... என்ன செய்யறது...
நான் வீட்டுக்கு போனதும்...
அவங்க அம்மாவை என் நம்பருக்கு ஃபோன் பண்ண சொல்லி பேசியிருக்கா... அப்பதான்... குரல் கம்மியா கேக்குது... நான் ஒரு குத்துமதிப்பாதான் பதில் சொல்லி இருக்கிறேன்னு தெரிஞ்சிகிட்டா...

கெட்டதிலேயும்  ஒரு நல்லது...

இன்னும் நான் ஃபோனை கீழ வச்சுட்டுதான் பதில் சொல்றேன்னு தெரியாது... அது தெரிஞ்சா... அடுத்து என்ன, எப்படி வெடிக்கும்ன்னு தெரியாது...

நித்யகண்டம் பூர்ணாயுசு மாதிரி ஆகிடுச்சு..."

என்று முடித்தார் சுகவனம்...

அன்றைய பொழுது அலுவலகத்தில்.... சபாபதியுடன் திரைப்பட வசனங்கள் பேசியும்... ரவியின் "ப்ளட் பிரஷர்" ஏற்றி இறக்கியும் கழித்தார் சுகவனம் ...

இரவு ஒரு எட்டு மணிபோல் சுகவனம் தலைமையிலான வினோத் உட்பட 13 பேர் அடங்கிய குழு வசந்த பவனில் உணவருந்த சென்றனர் ...

உள்ளே சென்றதும் சுகவனம் தலைமை வகிக்க ஆரம்பித்தார்...
"வினோத் இந்த மூணு டேபிளையும் ஒண்ணா சேர்த்து போட்டா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் சுகவனம்...

சொன்னது போலவே அமைக்கப்பட்ட நாற்காலிகளில் கிழக்கு மேற்க்காக... 12 பேரும்.... பக்கவாட்டில் வட திசையை நோக்கி 13வதாக சுகவனமும் அமர்ந்தனர்...

காலை முதல் பரிமாறிய களைப்பில் இருந்தாலும், களைப்பை வெளிக்காட்டாமல் இருக்கைகளை சரி செய்து அனைவருக்கும் தண்ணீர் பரிமாறிவிட்டு, அவர்களை நிமிர்ந்து பார்த்து புன்னகையுடன்...
"சார்... என்ன சாப்பிடுறீங்க...என்று கேட்டார்..."

அனைவரும் தங்களுக்கு வேண்டியதை, குறிப்பாக எவை எல்லாம் சீக்கிரம் பரிமாறப்படுமோ, எவை எல்லாம் சாப்பிட்ட பிறகு வயிற்றுக்கு பிரச்சினை இருக்காதோ அப்படியாக தங்கள் தேவைகளை சொன்னார்கள்...

அருகிலிருந்த கேப்டன் அனைத்தையும் குறித்துக்கொண்டு...
எதுவும் சொல்லாத சுகவனத்தை பார்த்தார்...

"என்னப்பா இது வழக்கம்போல இட்லி... தோசை... பொங்கல்ன்னு ... "மெனு கார்டு" கிடைக்குமா என்று கேட்டார் ... கேப்டன் சுகவனத்திடம் மெனு கார்டை எடுத்து கொடுத்தார்...

"அவங்களுக்கு கொடுங்க... அதுக்குள்ள நான் பார்த்து சொல்றேன்...." என்றார் சுகவனம்...

சிறிது நேரம் கழித்து... உணவு பரிமாறுபவர் கையில் மூன்று தட்டுகள், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு  தோசை, தட்டிற்கு இடமும் வலமும் நீண்டு ஆடிக்கொண்டே வந்தன...  ஒரு பக்கம் பரிமாறுபவர் முகத்திற்கு நேராக ஆடிக்கொன்டே வந்தது... தோசையின் வாசம் அவரது மூக்கிற்கும்... அவரது சுவாசம் தோசைக்குமான பரிமாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது...

தட்டின் மீது ஒரு தோசை அதன் மீது இன்னொரு தட்டு... அதன் மீது ஒரு தோசை... அதன் மீது ஒரு தட்டு என தட்டின் மீது தோசையா அல்லது தோசை மீது தட்டா என்பதை புரிந்துகொள்ள சிறிது நேரம் ஆகவே செய்யும்....

தட்டிற்கு அடியில் சுத்தமாக இருக்குமா என்பதை எல்லாம்  ஆராயக்கூடாது.... ஆராய்ந்தால் தோசை கிடையாது....

மூன்று பேருக்கும் கொண்டு வந்த தோசையை பரிமாறினார் ஊழியர்... பரிமாறிவிட்டு சுகவனத்தை பார்த்தார்...

"இது என்னப்பா 'பஞ்சாபி தாளி' தாளி செண்டிமெண்ட் பஞ்சாப்ல கூடவா இருக்கு" எனச் சொல்லி சிரித்தார்...

சிரிக்கமுடியாவிட்டாலும்... விருந்தோம்பல் காரணமாக ஊழியரும் சிரமப்பட்டு சிரித்துவைத்தார்... கேப்டனிடம் குறைசொல்லிவிட்டால் .. அதை வேறு சமாளிக்கவேண்டும்...

சுவிட்ச் போட்டு நிறுத்தியது போல தீடீரென சிரிப்பை நிறுத்திய ஊழியர்...
"சார்... உங்க ஆர்டர்..." என இழுத்தார்...

"நீங்க மத்தவங்களுக்கு கொண்டுவந்து கொடுத்துக்கிட்டே இருங்க சார்.... நான் சொல்றேன்" என்றார் சுகவனம்...

சுகவனம் பதில் சொல்லிய தோரணை ஊழியரின் மனதில் ஏதோ பொறி தட்டியது....
"என்ன நடந்தாலும்... அமைதியா இருக்கணும்.... நேத்தே கேப்டன் கிட்ட முறைச்சிக்கிட்டோம்... இன்னைக்கும் அது தொடர கூடாது... இறைவா... எனக்கு அந்த சக்தியை கொடு" என்று மனதிற்குள்ளேயே வேண்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்...

"ப்...பா... தேங்காய் சட்னி ஃபிரெஷா இருக்கு..." என்று ரசித்து ருசித்து சாப்பிட்டான் விஜய்... சாப்பிட்டுக்கொண்டே நிமிர்ந்து சுகவனத்தை பார்த்தான்...
சுகவனம் ஓரக்கண்ணால் விஜயை பார்த்தார்... யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று நினைத்து...

"சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்க சுகவனம்... அப்புறம் எங்களுக்கு வயிறு வலிக்கப்போகுது" என்றான் விஜய்...

"ஓ... பார்த்துட்டானா... சரி இந்த முறை கண்டிப்பா நம்ம ஆர்டரை சொல்லி அனுப்பிடனும் என்ற முடிவுக்கு வந்தார்..."

உணவு பரிமாறும் ஊழியர் ஒரு கையில் "நெய் ரோஸ்ட்" மறு கையில் "கல் தோசை" கொண்டு வந்தார்...

"என்னப்பா இது கோமாளி குல்லா மாதிரி இருக்கு... எந்த கோமாளி இதை ஆர்டர் பண்ணது..." என்று லேசாக கண் சிமிட்டியவரே  கேட்டார் சுகவனம்...

"கீ (நெய்) ரோஸ்ட்" சார் என்று சொல்லியபடியே வினோத்துக்கு பரிமாறினார் அந்த ஊழியர்...

வினோத் லேசாக முறைத்தபடி சுகவனத்தை பார்த்தான்

"நீ தானா டா?.....
அநேகமா மாஸ்டர் இதுக்கு முன்னாடி பட்டறையில வேலை பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்....
இல்லாட்டி இதுக்குனே மோல்ட் செஞ்சி வச்சிருப்பார்னு நினைக்கிறேன்....

ப்... பா... எவ்ளோ ஷார்ப்பா தகடு மாதிரியே இருக்கு"
என்று அந்த நெய் ரோஸ்ட்டின் உச்சிப்பகுதியை தொட்டு பார்த்து சொன்னார் சுகவனம்...

"சாஃப்ட்டா வேணும்னா கல் தோசை ஆர்டர் பண்ணுங்க சுகவனம்" என்று கார்த்திக் சொன்னான்...

"கல் தோசையா... பார்த்துடா அது இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கப்போகுது..." என்று கிண்டலாக சுகவனம் சொன்னதை உண்மையிலேயே அவருக்கு தெரியவில்லை போல என நினைத்து விளக்க ஆரம்பித்தான் கார்த்திக்...

"இல்ல சுகவனம் இது கொஞ்சம் நிறைய மாவு போட்டு கொஞ்சம் 'மொத்தா' இருக்கும்...." என விவரித்தான் கார்த்திக்...

"நிறைய மாவா... அதெல்லாம் ஒண்ணுமில்லை கார்த்திக்... அதே ஒரு கப் மாவு தான்... தவாலே நல்லா பரவலா  ஊத்தி மெழுகி, பக்குவமா சுரண்டி சுருட்டி எடுத்தா அது "ரோஸ்ட்", அப்படியே மொத்தையா ஊத்தி லேசா தடவி எடுத்தா "கல் தோசை"... மொத்தத்தில... கல் தோசைன்றது அரைகுறையா தீஞ்ச மாவு... அப்படியே பாரு ஓரத்திலே மாவு வேகாமாலே இருக்கும்.... சேர்த்து சப்பிட்டே நாளைக்கு லீவு...

ரோஸ்ட்ன்றது மொத்தமா தீஞ்ச மாவு... வெறும் கார்பன் தான்... சட்னி சாம்பார்லதான் ஏதாவது உடம்புக்கு தேவையானது இருக்கும்" என்ற சுகவனம் தொடர்ந்து...

"நல்ல சம்பர்ல ஊரவச்சு சாப்பிடு வினோத்.... இவருக்கு இன்னும் ரெண்டு கப் சாம்பார் கொண்டுவாப்பா... " என்று அந்த ஊழியரிடம் சொன்னார் சுகவனம்

"முதல்ல உங்களுக்கு ஆர்டர் பண்ணுங்க சுகவனம்..." என்றான் வினோத் சற்றே எரிச்சலுடன்...

"எனக்குதானே... முடிவுபண்ணிட்டேன்... நீ போய் சாம்பார் கொண்டுவாப்பா... என்னுடைய ஆர்டரை சொல்லறேன்..." என்றார் சுகவனம்

"சுகு எனக்கு இதுவே போதும்... நான் தொட்டு சாப்பிட்டுகிறேன்" என்றான் வினோத்...

"சொன்னா கேளுடா வினோத்... நம்ம உணவு பாதையெல்லாம் ரொம்ப சாஃப்ட்... இந்த தீஞ்ச மாவு தகடு மாதிரி உள்ளே போனா... அப்பறம் எரிய ஆரம்பிச்சிடும்... அது புரியாம காபி குடிப்ப... வாழைப்பழம் சாப்பிடுவ... தண்ணி குடிப்ப... சோர்ந்து போயி தூங்கிடுவே... காலைலே போராட்டமாயிடும்... உன் நல்லதுக்கு தன சொல்றேன்.... நல்லா ஊரவச்சு சாப்பிடு..." என முடித்தார் சுகவனம்...

சுகவனம் சொல்லிய இந்த பின் விளைவுகளை வினோத் பலமுறை அனுபவித்திருக்கிறான்... ஆனால் ஒருவரும் இப்படி விளக்கியதில்லை...

"ச்..சே... எத்தனை முறை அவஸ்தைபட்டிருப்போம்... சாப்பிட்றதுல என்ன நாகரிகம்.... தான் ஒரு பெரிய... தத்துவ விளக்கம் அடைந்துவிட்ட பெருமிதத்தில் வினோத் தனது நெய் ரோஸ்ட்டை தாக்கி சுக்குநூறாக்கி அதன் மீது சாம்பாரை கொண்டு அபிஷேகம் நடத்தினான்..."

"சார் உங்க ஆர்டர்..." என்ற ஊழியரிடம்

"பதட்டப்படாம கேட்டுக்கோங்க..." என்று ஆரம்பித்தார் சுகவனம்

"பதட்டப்படாம" என்ற வார்த்தையை கேட்டதும் அந்த ஊழியரின் மனதில் பதட்டம் உண்டாகியது....

தன்னுடைய ஆர்டரை விவரித்த சுகவனம்... 

....வியர்த்துப்போன ஊழியர்....

தொடரும்.... 

Tuesday, 25 December 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 10

சுகவனத்தின் "ஸ்மார்ட்" ஃபோன்

சுகவனத்தின் முன் வந்து நின்றார் தண்டபாணி....

"என்ன சார் பேசிட்டீங்க போல... லேசா கேட்டுச்சே...
3500 ரூபாய்ன்னு... காதுல விழுந்துச்சே...." என்றார் சுகவனம் ஆர்வத்துடன்...

"ஆ...ஆமா சார்... மேனேஜர்கிட்ட உங்க எதிர்ப்பார்ப்பை பற்றி எடுத்துச் சொன்னேன்... அவரும்  நல்ல ஐடியா கொடுத்தாரு..."
என சொல்லிக்கொண்டே அலமாரியிலிருந்த சுமார் 4800 ரூபாய்க்கு ஆரம்பித்து  இறுதியாக 3500 ரூபாய்க்கு விற்கக்கூடிய தகுதி வாய்ந்த
"Telkon - 'U will feel'" (டெல்கான் - யூ வில் ஃபீல்) மொபைலை எடுத்து வைத்தார் தண்டபாணி...

"என்னதிது?...... இதெல்லாம் வேணாம்பா... இதை எடுத்த இடத்திலேயே நைசா வச்சிடுங்க... நாம "சாம்சங் கேலக்ஸி ஏ9"லேயே என்ன பண்ணமுடியும்னு பாக்கலாம் வாங்க..." என்றார் சுகவனம்..

மறுபடியும் தண்டபாணியின் மனம் தடுமாற ஆரம்பித்தது....

"என்னடா இது... இந்தாளு மறுபடியும் முருங்கை மரத்திலே ஏறிட்டாரு...

திரும்பவும் மேனேஜர்கிட்ட போனா... திட்டுவாரு... வேற யார்கிட்டயாவது... இவரை தள்ளிவிட்டாலும்... அவனுக வியாபாரம் பண்ணிட்டா... அதை வெச்சே நம்மள கேவலப்படுத்துவானுங்க.... ச்.சே... இன்னைக்கு யாரு முகத்தில முழிச்சோம்... "
என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டார் தண்டபாணி...


அதிகாலை எழும்போது உள்ளங்கைகளை ஒன்றாக வைத்து தேய்த்துவிட்டு அதில் கண் விழித்தால்... அந்த நாள் முழுவதும் நல்ல ஆற்றலோடு இருக்கலாம்... என்று ஒருவர் சொன்னதிலிருந்து அதையே வழக்கமாக வைத்திருந்தார் தண்டபாணி...

தனது உள்ளங்கையின் முழு ஆற்றலையும் உணரும் நாள் இது என்பதை தண்டபாணி அறிந்திருக்கவில்லை...

"என்னப்பா... இவ்ளோ யோசிக்கிற... அது என்ன... டெல்கானா... செல்கானா..? அத எடுத்து வச்சிட்டு வாங்க "சாம்சங் கேலக்ஸி ஏ9" விலையை எப்படி குறைக்கணும்னு சொல்லறேன் வாங்க..."

காசு நிறைய வைச்சிருக்கிறவங்க கிட்ட அதே விலைக்கு விக்கலாம் தப்பில்லே... நமக்கெல்லாம் அந்த விலை ஒத்துவராது.... நானும் உன்னை மாதிரிதான்ப்பா...." என்றார் சுகவனம்.. எப்படியும் தண்டபாணி தன்  வசமாகிவிடுவார் என்ற நம்பிக்கையோடு...

சுகவனம் சற்றும் எதிர்பாராத விதத்தில்...

"நான்  "சாம்சங் கேலக்ஸி ஏ9" எல்லாம் வாங்கமாட்டேன் சார்..." என்றான் தண்டபாணி...

சற்றும் தாமதிக்காமல்... "தெரியும்ப்பா... அதுக்கு அடுத்த மாடல்தான் வாங்குவீங்க..." என்றார் சுகவனம்...

உடனே.. தனது பேசிக் மாடல் ஃபோனை எடுத்து மேஜை மீது வீசுவது போன்ற பாவனையுடன் ஓசை வரும்படி போட்டார் தண்டபாணி...

அடுத்த வினாடி... தனது பாக்கெட்டில் ஒளிந்திருந்த தன் பேசிக் மாடல் ஃபோனை எடுத்து மெதுவாக தண்டபாணியின் ஃபோன் அருகே வைத்தார்...

சுகவனம்  வைத்திருந்த ஃபோனுக்கு குறைந்து, வேறு மாடல் இல்லை என்பது, மொபைல் ஃபோன் வியாபாரத்திலேயே இருப்பதால் தண்டபாணிக்கு தெளிவாக தெரிந்தது....

"தம்பி இந்த ஃபோனை எடுத்து உள்ளே வைங்க... உங்க டைட் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்லே இன்னொரு பெரிய ஃபோன்  தெரியுது பாருங்க... அது ஏ9-ஆ கூட இருக்கலாம்லே... சும்மா இப்படியெல்லாம் யோசிச்சு என்னை சமாளிக்க நினைக்காதீங்க..." என்றார் சுகவனம்

சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுகவனத்தின் நினைவில்... அவரது மேனேஜர் ரஞ்சனி திட்டியது நினைவுக்கு வந்தது...

"உங்க அறிவை பயன்படுத்தாதீங்க... நான் சொல்றதைமட்டும் செய்ங்க..."

ஆங்கிலத்தில்... "Don't use your brain... simply do what I say..?"


ரஞ்சனியிடம் வாங்கிய திட்டுகளிலேயே சுகவனத்திற்கு மிகவும் பிடித்த திட்டுகளுள் இதுவும் ஒன்று...

இந்த வாசகத்தை தண்டபாணியிடம் பயன்படுத்த முடிவு செய்த சுகவனம்...
"புத்திசாலித்தனமா செயல்படறீங்க... தண்டபாணி... ஆனா அதனால எந்த பிரயோஜனமும் இல்லை... நான் சொல்றதை மட்டும் செய்யுங்க..." என்றார்...,

தான் கற்றதை பயன்படுத்திவிட்ட திருப்தியுடன் (கற்றபின் நிற்க அதற்கு தக)...

"ச்..சே... பாக்கெட்லே இருக்கிறது "கேலக்ஸி ஏ9"ன்னு எப்படி கண்டுபிடிச்சாரு... ஆண்டவா... இப்படி மாட்டிக்கிட்டனே... எப்படி தப்பிக்கப்போறேன்னு தெரியலையே... முடிய பிச்சிக்கலாம் போல இருக்கே..." என்று மனமாற அவஸ்தை பட்டுக்கொண்டிருந்த தண்டபாணியிடம்...

"தம்பி "கேலக்ஸி ஏ9" எப்படி வாங்கணும்ன்னு எனக்கு தெரியும்... முதல்ல ஒரு பேப்பர் பேனாவை எடுங்க... "கேலக்ஸி ஏ9" ஃபோனையும் எடுங்க..." என்றார் சுகவனம்...

தண்டபாணிக்கு ஒன்றுமே புரியவில்லை... தன் பாக்கெடில் இருந்தது "கேலக்ஸி ஏ9" தான் என்பதை வெளியில் எடுக்காமலேயே கண்டுபிடித்ததிலிருந்து...  தன் சுய சிந்தனையை இழந்திருந்த தண்டபாணி
பேப்பர் பேனாவுடன் தயாரானார்...

"தேவைக்கு செலவு செய்யும் போது பிரச்சனை இல்லை.. ஆனா வசதிக்கு செலவு செய்யும் போதுதான் கஷ்டம்...
வசதிக்கும் வீணடிப்பதற்கும் செலவு செய்துதான் நம்ம நாட்டுல  விலைவாசியெல்லாம் இப்படி ஏறி இருக்கு..." என்றார் சுகவனம்...

தண்டபாணிக்கு, லேசாக புரிந்தது போலும் புரியாதது போலும் இருப்பது புரிந்தது....

"இப்படி விளக்கமெல்லாம் கொடுக்கறாரு... அடுத்து என்ன கேக்கபோறாருன்னு தெரியலையே..." என்று திகைத்து நின்றிருந்த தண்டபாணியிடம்....

"தேவை இல்லாத வீணான விஷயங்களை எடுத்திட்டாலே போதும்...
ஏ9... நமக்கு ஏத்த விலைக்கு வந்திடும்..." என்று முடித்தார் சுகவனம்...

 தண்டபாணியின் உடல்... பொருள்... ஆவி... எல்லாம் தனித்தனியாக தெரிந்தது...

"ஏ9"னோட டெக்னிக்கல் டீடைல் சொல்லுங்க..." என்றார் சுகவனம்...

"128 ஜி.பி. ஸ்பேஸ் (சேமிப்பு இடம்) 8 ஜி.பி. RAM இருக்கு சார்.." என்றார் தண்டபாணி..

"1 TB ஹார்ட் டிஸ்க்கே 3500 ரூபாய்க்கு உதைப்படுது தெரியுமா... 128 ஜி.பி. எதுக்குப்பா ஃபோனல..." என்றார் சுகவனம்...

"சார்.. குறைஞ்சது 30 படத்துக்கு மேல அதுவும் (HD)ஹச்.டி-ல  ஸ்டோர் பண்ணி வெக்கலாம் சார்.." என்று ஆர்வமாக சொன்னார் தண்டபாணி..

"ம்... ஸ்டோர் பண்ணிவச்சு... நான் போட்டிருக்கற லென்ஸோட பவர் என்னன்னு தெரியுமா... இதுக்குமேல பவர் ஏறுச்சினா லென்ஸ் கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க... தவிரவும்... படமெல்லாம் தியேட்டர்ல பாக்கணும்... இதைவிட பெரிய ஸ்கிரீன்... வெறும் 120 ரூபாய்தான்... தலைக்கு பின்னால இருந்தெல்லாம் சவுண்ட் வருதுப்பா...தெரியுமா..."

அப்பாடா ... ஒருவழியாக முடித்துவிட்டார் என்று நினைக்க முற்பட்ட தண்டபாணியின் மனதில் சுகவனம் சொன்ன வார்த்தைகள்... பெரிய பாறாங்கல்லாய் வந்து விழுந்தது... தண்டபாணியின் ஆவி நிலைகுலைந்தது...

"அதனால அதை குறைச்சிடுங்க... எனக்கு அவ்வளவு ஸ்டோரேஜ் வேண்டாம்... 28 ஜி.பி. ஸ்பேஸ் 4 ஜி.பி. RAM-ஏ அதிகம்... "

"அடுத்து... கேமரா பத்தி சொல்லுங்க..." என்றார் சுகவனம்...

"24,10,8,5 எம்.பி.ன்னு 4 கேமரா இருக்கு... " என்று எவ்வித உணர்ச்சியுமின்றி சொன்னார் தண்டபாணி...

"என்னப்பா இது... டைலர் பேண்ட் அளவு சொல்ற மாதிரி சொல்ற... நான் என்ன சினிமா படமா எடுக்க போறேன்... சரி இந்த மாடலுக்குன்னு மரியாதைக்காக ஒரு 10 எம்.பி. கேமரா போதும்... கேமராவால  ஏகப்பட்ட பிரச்சனைப்பா... வெளியில சொல்ல முடியாது..." என்ற சுகவனம் தொடர்ந்து...

"சரி இப்போ நான் சொன்ன கான்பிகரேஷன்க்கு என்ன விலையாகும்னு சொல்லுங்க..." என முடித்தார்...

ஒரு நொடி ஸ்தம்பித்துபோனாலும் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி...
"சார் இதை பாருங்க... நீங்க சொன்ன கான்பிகரேஷன்தான் இந்த மாடல்ல இருக்கு... "Telkon - 'U will feel'" (டெல்கான் - யூ வில் ஃபீல்)" என்று ஒருவழியாக சுகவனத்தை சமாளித்துவிடலாம் என நினைத்து... அந்த ஃபோனை எடுத்து காண்பித்தார்...

"என்னைய்யா மடல் அது "யூ வில் ஃபீல்"... அப்படின்னா... வாங்கினப்புறம் ஏன்டா வாங்கினோம்னு ஃபீல் பண்ணுவோம்கிறத சிம்பாலிக்க சொல்லற மாதிரி இருக்கே...

அப்படியே பார்த்தாலும்... ஏ9 மாதிரி பெரிய டிஸ்பிளே (திரை) இல்லையே... " என்ற சுகவனம்...

"சரி... ஒன்னு பண்ணுங்க... அந்த டிஸ்பிளே எடுத்து இதுக்கு மாத்தி கொடுத்திடுங்க... வேணும்னா மேற்கொண்டு 500 ரூபாய் போட்டு மொத்தமா 4000 ரூபாய் கொடுத்திடுறேன்... அதே 100 செக் லீப் அப்படியே இருக்கு... 40 ரூபாய் ஒரு மாசதுக்கு... என்ன சொல்றீங்க?..." என்றார் சுகவனம்...

மீண்டும் ஒரு முறை  வெறுத்துப்போன தண்டபாணியின் ஆவி அவனது கூட்டிலிருந்து வெளியே வந்து அவனது உடலையும், மனதையும் ஏளனமாக பார்த்து சிரித்துவிட்டு மறுபடி உள்ளே சென்று ஒடுங்கிவிட்டது...
நிலைகுலைந்த தண்டபாணி... மேஜையை இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்...

பேசாம நாமளே காசு கொடுத்து வாங்கிகொடுத்திட்டு அப்புறம் 100 மாசத்துக்கான செக்க நாம வாங்கிக்கலாம் என்று அவன் மனம் யோசித்த அடுத்த க்ஷணம் அவனது அறிவு அலறியது...

"அடேய்... மடையா... என்ன யோசனை இது... இதை விட நீ வேலையை விட்டே போய்விடலாம்..." என்று... அசரிரீ போல் தண்டபாணிக்குள் கேட்டது...

"ஆம்... அதுதான் சரி... இன்னைக்கே ரிசைன் பண்ணறோம்... " என்று அவனது மனம் சிந்திக்க தயாரானது...

"ச்.சே... என்ன மானங்கெட்ட மனம் இது... எதை கேட்டாலும் ஆராயாமல் இப்படி ஓடுகிறதே..." என்று அவன் அறிவு, சிந்தனையை வீசியது...

"ஆமாமில்ல என்ன இப்படி புத்திகெட்டு சிந்திக்க ஆரம்பிச்சுட்டோம் என அவன் மனம், அவனது அறிவு வீசிய சிந்தனையை தொடர ஆரம்பித்தது..."

சிலையாக நின்றிருந்த  தண்டபாணிக்குள் ஓர் ஞான விசாரணையே நடந்துகொண்டிருந்தது...

ஓரளவு தண்டபாணியின் நிலையை அவனது இமைக்காத கண்கள், அசையாத உடல் மூலமாக புரிந்து கொண்ட சுகவனம்... மேற்கொண்டு ஏதாவது கேட்டல்... இவன் மூர்ச்சையாகி விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்து..

தண்டபாணியை தடுத்தாட்கொள்ள முடிவு செய்தார்...

மெதுவாக தண்டபாணியின் கைகள் மீது தனது கைகளை வைத்து... மெல்லிய குரலில்... "தம்பி... " என்றார்...

தண்டபாணியின் கண்கள் இமைக்க ஆரம்பித்தது...
கண்களில் தண்ணீர் நிரம்பி இருந்தது... நல்ல வேலை மதகுகள் எதுவும் உடையவில்லை...

நிரம்பிய தண்ணீர் மீண்டும் கண்களுக்குள்ளேயே சென்றுவிட்டது...

"தம்பி... என் தேவையை புரியவைக்கவே டைம் ஆகிடுச்சு... ஒன்னும் அவசரமில்லை... பொறுமையா உங்க மேனேஜர்கிட்ட பேசி... என்னோட தேவையை அவருக்கு புரியவைங்க... நான் நாளைக்கு வந்து பார்க்குறேன்..." என்று சொல்லிவிட்டு பதிலேதும் எதிர்பார்க்காமல் "பூர்ணவிகா"விலிருந்து வெளியேறினார்...

தண்டபாணி சுதந்திரமாக சுவாசிக்கலானார்...தற்காலிகமாக....

சொன்னபடியே அடுத்த நாள் "பூர்ணவிகா" வந்த சுகவனத்தின் கண்களில்... தண்டபாணி தென்படாததால், விசாரித்தார்... விசாரணையில், தண்டபாணிக்கு "குளிர் ஜுரம்..." விடுமுறையில் இருப்பதாக தெரிந்துகொண்டார்...

"சின்ன பையன்... இன்னும் அதனுபவம் போதலை..." என்று கிளம்ப எத்தனித்த சுகவனத்தை...

தண்டபாணியின் இந்நிலைக்கான காரணத்தை அறியாமல்...

"வணக்கம் சார்... நான் நாகராஜ்... தண்டபாணிக்கிட்ட கேட்டது என்னன்னு என்கிட்டே சொன்னா... நான் உங்களுக்கு உதவி செய்யறேன்..." என்றான் ...

நாலு பேரிடம் சொன்னால் தப்பில்லை... யாராவது ஒருவர் மூலம் தனக்கு தேவையான "சாம்சங் கேலக்ஸி ஏ9" ஃபோன் கிடைக்கும் என நம்பி... நாகராஜிடம் விளக்க ஆரம்பித்தார் சுகவனம்...

நாகராஜின் நிலை = ?...

தொடரும்...

Saturday, 15 December 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 9

சுகவனத்தின் "ஸ்மார்ட்" ஃபோன் தேடல்

நேரம் சரியாக மாலை 6.30....

ஏகப்பட்ட வணிக மையங்கள் மின் விளக்குகளால் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளும் போட்டியில் முனைப்புடன் பிரகாசிக்க ஆரம்பித்தன...

அமாவாசை பௌர்ணமி என எந்த தொடர்புமில்லாமல் இரவில் பிரகாசிக்கக்கூடிய வீதிகள் அவை...

"ப்...பா... எவ்ளோ லைட்ஸ்..., எவ்ளோ கரண்ட் பில் வரும்... நம்ம 5 நிமிஷம் ஃபேன் ஆஃப் பண்ணாம விட்டாலே அரை மணி நேரம் கிளாஸ் எடுப்பா...
இங்க எப்படி?!... யாருக்குமேவா கல்யாணமாகியிருக்காது?!..."
என பிரமித்துக்கொண்ட சுகவனம் ஒருவழியாக "பூர்ணவிகா" கடை முன் பிரவேசித்தார்...

முழுக்க கண்ணாடி, கதவு எது சுவர் எது என கண்டறிய முடியாத வண்ணம் திறம்பட அமைத்திருந்தனர்...

இதுதான் கதவு என கண்டுபிடிக்க வசதியாக கண்ணாடியிலேயே வட்ட வடிவிலான பூ வேலைப்பாடு கொண்ட கைப்பிடி... அதனருகில் "PULL" என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது...

வழக்கம்போல் சுகவனம் அதைப் பார்த்து "புள்"னா "தள்"ளு... அதானே  ரைமிங்கா வருது என முடிவு செய்து, சற்றே கம்பீரத்தோடு "புள்"ளினார்  (தள்ளினார்)
ம்...ஹும்... லேசான கிரீச் சத்தத்தோடு நின்றது...
தன்னுடைய கம்பீரமான கட்டளைக்கு அடிபணியாத அந்தக் கண்ணாடிக்  கதவை மேலும் கீழும் முறைத்துப் பார்த்தார்.....

உள்ளே இருந்த "பூர்ணவிகா" பணியாள்... புரிந்துகொண்டு...  உள்ளிருந்து கதவை தள்ளி சுகவனத்தை "வண்க்கம்" என தமிளில் கூறி வரவேற்றார்...

"ம்...அதென்ன நீங்க தள்ளினா மட்டும் திறக்குது... நாங்க தள்ளினா திறக்காதா?... கஸ்டமர்தான் பாஸ் முக்கியம்.... கஸ்டமருக்கு ஏத்தமாதிரி கதவை மாத்துங்க... உங்களுக்கு நாங்கதான் முக்கியம்...." என கூறிவிட்டு எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் மிடுக்காக உள்ளே நடந்து சென்றார்....

வினோத் காண்பித்த "சாம்சங் கேலக்ஸி ஏ9" மனதில் வைத்துக்கொண்டு அனைத்தையும் நோட்டமிட்டார்.....

பிறகு மெதுவாக ஒரு விற்பனையாளரை தேர்ந்தெடுத்த சுகவனம்....
" உங்க பேரு தம்பி...." என கேட்டார்...
"தண்டபாணி... சார்..." என்றார் அந்த விற்பனையாளர்...
"தண்டபாணி சார்... என்பது முழு பேரா... வித்தியாசமா இருக்கே..." எனச் சொல்லி... உரக்க சிரித்தார்....
"சும்மா தமாஷ்...." என்று லேசாக கண் சிமிட்டினார்... தன்னுடைய ஹாஸ்ய உணர்வை வெளிப்படுத்திவிட்டதாக நினைத்து...


"ம்...இருக்குற பிரச்னை போதாதுன்னு இது வேறயா..." என நினைத்துக்கொண்டு... வேறு வழியின்றி லேசான புன்னகையை  உதிர்த்தார் தண்டபாணி...

சற்றே யோசிப்பது போன்று.... யோசித்து
"...சாம்சங்.... கேலக்ஸி.... ஏ9... எவ்ளோ ஆகுது..." என கேட்டார் சுகவனம்

ஃபோனை எடுத்து சுகவனத்தின் முன் வைத்த தண்டபாணி

"முப்பத்தி ஆறாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு ரூபாய் சார்..." என்றார் தண்டபாணி

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போன சுகவனம்...
"ஒரு ஃபோனோட விலையா ... எதனால...?..." என்றார் சுகவனம்

"லேட்டஸ்ட் மாடல் சார், எல்லா டெக்னாலஜியும் இதுல இருக்கு சார்..." என்றார் தண்டபாணி

 சற்றும் எதிர்பாராத வண்ணம்... சிறிதும் யோசிக்காமல்...
 "வாயில தானே பேசணும்..." என கேட்டுவிட்டார் சுகவனம்

"சார்..." என்று திகைத்து நிறுத்தினார் தண்டபாணி

"இல்லப்பா... மனசுல நினைச்சாலே இதுவே கால் பண்ணி நினைக்கிறத.. நினைக்கிற ஆள்கிட்ட சொல்லிடுமோ!...
அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா.. குடும்பத்தில பிரச்னை ஆகிடும்பா...
வம்பை விலை கொடுத்து வாங்கினமாதிரி ஆகிடும்..."

"சரிங்க சார் உங்க பட்ஜெட்டை சொல்லுங்க... அதுக்கேத்தமாதிரி ஃபோனை காட்டுறேன்..." என்றார் தண்டபாணி

"ஹலோ... எனக்கேத்தமாதிரியான ஃபோனை நான்தான் செலக்ட் பண்ணனும்... நீங்க சொல்லக்கூடாது... புரியுதா..." என்றார் சற்றே கடினமான குரலில்...

தான் சரியாக 'தவறான' ஆளிடம் சிக்கியிருப்பது புரிய ஆரம்பித்தது தண்டபாணிக்கு...

மௌனமே சரியான வழி என நினைத்து அமைதியாக இருந்தார் தண்டபாணி...

"...இப்படியே எவ்ளோ நேரம்பா ரெண்டு பேரும் அமைதியா இருக்கிறது... நாம என்ன லவ்வர்ஸ் பார்க்லயா இருக்கோம்..." எனக் கூறி அங்கு நிலவியிருந்த அமைதியை மட்டுமல்லாமல் விற்பனையாளர் தண்டபாணியின் குழப்பத்தையும் கலைத்தார் சுகவனம்...


"முடிவா வாங்குற மாதிரி ஒரு விலையை சொல்லுப்பா..." என்றார் சுகவனம்...

"சார்... இது பிராண்டட் ஃபோன்... கடைசியா... 35800 ரூபாய் கொடுங்க சார்..." என்றார் தண்டபாணி

"என்னப்பா இது வாங்குற மாதிரி கேட்டா... " என இழுத்தர்  சுகவனம்...

"சார்... ஃபுல் கேஷா இல்ல... இ.எம்.ஐ யா சார்..." எனக் கேட்டார் தண்டபாணி

"என்னப்பா நீ ஏதோ 1000... 2000... சொன்னா பரவாயில்ல...கேஷ் கொடுத்து வாங்கலாம்...
ஒரேயடியா என் ஒன்றரை மாச சம்பளத்தையே கேக்குறயேப்பா ...
இ.எம்.ஐ தான்..." என்றார் சுகவனம்

"சரிங்க சார் இனிஷியல் அமௌன்ட் எவ்ளோ கட்டறீங்க?..." என கேட்டார் தண்டபாணி...

"அதான் மாசாமாசம் இ.எம்.ஐ கட்டப்போறேனே... அப்புறம் எதுக்கு இனிஷியல் அமௌன்ட்...
நல்லா கேட்டுக்கோங்க...
என்னுடையது சேலரி அக்கௌன்ட்...
ரெண்டு செக் புக் அப்படியே இருக்கு... 100 செக் லீஃப் ...
இப்பவே கையெழுத்து போட்டு கொடுத்துடறேன்...
100 இ.எம்.ஐ எவ்ளோ வருதுன்னு உங்க அக்கவுண்ட்டண்ட் கிட்ட கேட்டு சொல்லுங்க... சீக்கிரம்...

35800 ரூபாய்ன்னா... மாசம் 385 ரூபாய் வரும்...
நானும் அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்ப்பேன்... " என்று பெருமிதமாக சொல்லி முடித்தார் சுகவனம்.

... ஒரு நிமிடம்...  தண்டபாணியின் உடல், மனம் இரண்டும் முதல்முறையாக ஒரே நேரத்தில் ஸ்தம்பித்துப் போனது...

தான் கனவுலகத்தில்தான் இருக்கிறோம்... கடவுளே... இது நிஜம் அல்ல...
என தண்டபாணியின் மனம் நினைத்தது... "358 ரூபாய்" தண்டபாணியின் காதுகளுக்கும் மூளைக்கும் இடையே சிக்கி சுற்றிக்கொண்டிருந்தது....

இது கனவல்ல... நிஜம்... என்பது புரிய சில நொடிகள் ஆனது தண்டபாணிக்கு...

தண்டபாணியின் மனமும் உடலும் வழக்கம் போல் தனித்தனியாக செயல்பட ஆரம்பித்தது...

"சார் ஒரு நிமிஷம்... தண்ணி குடிச்சிட்டு வரேன்..." எனச் சொல்லி அவரிடமிருந்து விடுபட்டு சென்றார் தண்டபாணி...

நேரே மேனேஜர் அறைக்கு சென்ற தண்டபாணி... நடந்ததை மேனேஜரிடம் பரிதாபமாக சொன்னார்...

"என்ன தண்டபாணி... வந்திருக்கிற கஸ்டமரை சமாதானப்படுத்தி ஏதாவது வியாபாரம் பண்ணுவீங்களா... அத விட்டுட்டு என்கிட்டே வந்து கம்பிளைன்ட் பண்றீங்க..." என்ற மேனேஜர் தொடர்ந்து ...

 "போங்க போயி... அந்த 3500 ரூபாய் விலையிலான ஃபோனை காட்டி முடிங்க... நமக்கும் அதுலதான் நல்ல மார்ஜின் கிடைக்கும்..." என முடித்தார்.

மேனேஜரிடம் உபதேசம் வாங்கிக்கொண்டு வெளியே வந்த தண்டபாணியை பார்த்த சுகவனம், தனக்காக ஏதோ பெரிய தள்ளுபடி விலையை தரப்போகிறார் என நினைத்து புன்னகைத்தார்.....

எப்படியும் இந்த ஆளிடம் ஏதாவது ஒரு ஃபோனை வியாபாரம் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன்...
சுகவனத்தின் சுய ரூபம் தெரியாத...தண்டபாணி அவரை நோக்கி லேசான புன்னகையுடன் வந்தார்...

தொடரும்....

Tuesday, 4 December 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 8

சுகவனத்தின் "ஸ்மார்ட்போன்" தேடல்

ஆழ்ந்த உறக்கத்திற்கு பின், குழந்தை மனதுடன் விழித்தெழுந்தார் சுகவனம்.... மனதில் எந்த ஒரு குழப்பமோ, சஞ்சலமோ, அவசரமோ, பதற்றமோ இல்லை....

அடுத்த இலக்கு அலுவலகம் கிளம்புவது....

வழக்கம்போல் தனது அதிகாலை யுத்தங்களை முடித்துவிட்டு... காலை உணவருந்த வந்தமர்ந்தார்.... புவனா பரிமாறினாள்...

தனது வழக்கமான பாணியிலேயே பயணப்பட்டு அலுவலகம் வந்தடைந்தார்...

காலையிலேயே ஒரு ரிப்போர்ட் வாங்க வினோத் சுகவனத்தின் இருக்கை அருகே காத்திருந்தான்...


வினோத் கையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன், ஆழ்ந்த சிந்தனையோடு தனது விரல்களால் ஸ்மார்ட்போனின் திரையை மேலும் கீழுமாக தள்ளிக்கொண்டிருந்தான்...

"புது போனா... தெரியுது... அதை எதுக்கு என் முன்னாடி வச்சு கொஞ்சிக்கிட்டு இருக்கே...." என்றார் சுகவனம்

"இல்ல... சுகு... ஒரு கஸ்டமர் போன் நம்பர் கொடுத்தாரு... இதுலதான் ஸ்டோர் பண்ணி வச்சேன்... இப்ப காணல..." என்றான் வினோத்

"முதல்ல... போன் நம்பர் ஸ்டோர் பண்ண கத்துக்கிட்டயா... ஸ்மார்ட்போன் வாங்கிட்டா மட்டும் போதுமா... எப்பவுமே பேப்பர் பேனாதான் பெஸ்ட்..." என்றார் சுகவனம்...

"சும்மா அதையே சொல்லாதீங்க சுகு... உங்களால வாங்க முடியல... இதெல்லாம் சயின்ஸ்... டெவலப்மென்ட்...  " என்றான் வினோத், சுகவனத்தின் கிண்டல் பேச்சை நிறுத்துவதற்காக...

"காசு இருந்தா போதுமா?... அறிவியலை பயன்படுத்தனும்னா அறிவிருக்கணும்...." என்று சற்றும் யோசிக்காமல்... உண்மையை போட்டுடைத்த சுகவனத்தின் பேச்சை கேட்டு வினோத் திகைத்துபோனான்...

அன்றைய முன்தினம் வினோத் அவசரத்தில் கஸ்டமர் கொடுத்த போன் நம்பரை டைப் செய்தானேயொழிய அதை பதிவு செய்ய மறந்து போனான்.... கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினான்...

"இதுக்கெல்லாம் கோபப்பட்டா எப்படிப்பா.. வா வினோத்.." என்று பிடித்து நிறுத்தினார்...

சுகவனம் சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்ற எண்ணத்துடன் வினோத்தும் நின்றான்...

"நீங்க ஏன் ஸ்மார்ட்போனுக்கு மாறக்கூடாது..." என்றான் வினோத் மெதுவாக...
"இப்ப இ.எம்.ஐ.  வசதியெல்லாம் இருக்கு சுகவனம்.." என்று முடித்தான்..

"இது என்ன போன்? எவ்வளவு....?" என்று கேட்டார் சுகவனம்..

"இது 'கேலக்ஸி ஏ9'..." என்றான் முணுமுணுத்தபடி...

"ம்...ஆஹ்... ஆஹ்...ம்... என்னது..." என்றார் சுகவனம்

தான் சரியான பெயரைத்தான் சொல்கிறோமா என்ற சந்தேகத்துடன் அந்த போனை முன்னும் பின்னும் சுழற்றி பார்த்துவிட்டு...

"சாம்சங் கேலக்ஸி ஏ9" என்றான் சத்தமாக...

"நான் 3000 ரூபாய்தான் கொடுத்தேன்... மிச்சம் இ.எம்.ஐ. போட்டுட்டேன்..." என்றான் வினோத்...

மேற்கொண்டு அவனிடம் விலையை கேட்க சுகவனத்திற்கு விருப்பமில்லை.
நாமளும் இன்னைக்கு சாய்ந்திரம் அலுவலகம் முடிந்தவுடன் கடைக்கு போறோம்... வாங்குறோம்... என்று முடிவு செய்தார்...

அலுவலகத்தில் 24 மணி நேரமும் இன்டர்நெட் வசதியுள்ள கணினி சுகவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது...

"ஏன் சாய்ந்திரம் வரைக்கும்... இப்பவே... ஆன்லைன்ல எது லேட்டஸ்ட் மாடல்னு ஏன் ஆராயக்கூடாது..."

உடனே கணினி முன் அமர்ந்த சுகவனம்... "வலைதளத்தினுள் விழுந்தார்...."

முதல்ல எந்தக் கடையிலே நல்ல பிராண்ட் போன்கள் நிறைய இருக்குன்னு பார்ப்போம்... என முடிவு செய்தார்...

எந்த கடையிலும்  நல்ல பிராண்டை விட... அவர்களுக்கு நல்ல லாபம் தரும் பிராண்டையே 'வற்புறுத்தி' (அதாவது.. அதன் பெருமைகளை எடுத்துச்  சொல்லி) விற்பார்கள் என்ற வியாபார உத்தியை சுகவனம் அறிந்திருக்கவில்லை...

சிட்டியிலேயே அதிக கிளைகள் கொண்டது "பூர்ணவிகா"  மட்டுமே...
ஆங்கிலத்தில்... POORNAVIKA... Your Mobile... Our choice...
தமிழில்...  பூர்ணவிகா.... உங்கள் மொபைல்... எங்கள் சாய்ஸ்...
என்ற தாரக மந்திரம் அவர்களுடையது...
வருடத்திற்கு ஒரு நடிகை அழகாக (......!?) அதற்க்கு விளம்பர மாடலாக இருப்பார்கள்....

சுகவனமும் "பூர்ணவிகா" வலைதளத்தினுள் பிரவேசித்தார்....

கணினி முன் அவர் அமர்ந்தபோது மதியம் சுமார் 1.30 மணி இருக்கும்...
ஆராய்ச்சி முடியாத நிலையில் அவரது கண்கள் எரிய ஆரம்பித்தது...
"டீ ரெடி ஆகிடுச்சு சார்..." என்று தூரத்தில் ஒரு குரல் கேட்பது போல இருந்தது...

உள்ளுணர்வில் ஏதோ ஒரு  எண்ணம் தோன்றி மணி பார்த்தார் - மாலை 4.15 ஆகி இருந்தது...

சுகவனத்திற்கு சிரிப்பு பொங்கியது... தனியாக சிரித்தால் வேறு மாதிரி ஆகிவிடுமே என்கிற எண்ணத்துடன் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தார்....

அந்த நேரம் அங்கு வந்த வினோத்... "என்ன சுகு....என்னாச்சு..."என்றான்...

"ஒண்ணுமில்லடா எந்த போன் இப்ப விலை குறைவாகவும் நல்ல தரமாகவும் இருக்குதுனு நெட்ல தேடிட்டிருந்தேன்...." என்றார் சுகவனம்

"கண்டுபிடிச்டீங்களா..." என்றான் வினோத்

அவ்வளவுதான்.... சுகவனம் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்... கண்களில் தண்ணீர் வரும் வரை சிரித்து தீர்த்தார்..

"அதைத் தவிர பாக்கி எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டேன்..." என்றார் சிரிப்புக்கிடையே...

"பாக்கி எல்லாத்தையும்னா?..." என்றான் வினோத்

"ஒவ்வொரு போனுக்கும்  ஒவ்வொரு நடிகை விளம்பரம் பண்ணறாங்க...
அவங்கள பத்தின லேட்டஸ்ட் கிசுகிசு வரைக்கும்... எல்லாத்தையும் படிச்சிட்டேன்..." என்றார்.... அவரை நினைத்து அவரே சிரித்துக்கொண்டு...

"சரி நான் கிளம்புறேன்!..." எனச் சொல்லி கிளம்பினான் வினோத்

"ச்.. சே.... வலைத்தளம்னு சரியாத்தான் பேர் வச்சிருக்கானுங்க... எப்படி சிக்குனேன்னு எனக்கே தெரியல... "பூர்ணவிகா" வலைதளத்துக்கு உள்ளே போனோம் அங்கிருந்து எப்படி வெளியிலே போனோம்?...ச்சே...." என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு.....

"சரி... இனிமேலயாவது கொஞ்சம்... வேலைய பார்ப்போம்...
வாங்குற சம்பளத்துக்கு உண்மையா இருக்கணும்... " என்று தன் வழக்கமான நையாண்டி பாணியிலே நினைத்துக்கொண்டு வேலையை தொடர்ந்தார்...

நேரம் மாலை 5.30....

"சரி... கிளம்பி நேரா "பூர்ணவிகா" போறோம்... மொபைல் போன் வாங்குறோம்... " என்று கிளம்பினார் சுகவனம்...

இம்முறை சுகவனத்தால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி "பூர்ணவிகா" விற்பனையளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...


தொடரும்...

Wednesday, 28 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 7

... சுகவனத்தின் (இல்)வாழ்க்கை


அடுத்த நாள் காலை தனது வீட்டிலிருந்து வாக்கிங் செல்ல தயாரான சுகவனத்தின் முன்... டம்பளரை கொண்டு நீட்டினாள் புவனா...

சற்றே தடுமாறிய சுகவனம் சுதாரித்துக்கொண்டு
"நான்தான் காபியை விட்டுட்டேனேம்மா..." என்றார்

"இது காபி இல்லைங்க...." என்றாள் புவனா

ஒரு நிமிட அமைதி.... (சுகவனத்தின் மனதிற்கு தவிர ...)

"அப்புறம்...." என்று இழுத்தார் சுகவனம்...

"குடிச்சிப்பாருங்க..." என்றாள் புவனா புன்னகையோடு....

புவனாவின்  சிரித்த முகம்  சுகவனத்திற்கு மிகவும் பிடிக்கும்....

அடிக்கடி, "இந்தச் சிரிப்புதான்..." என புகழ்வார்... 
புவனா எவ்வளவு கோபப்பட்டாலும் இதுபோன்று ஏதாவது சொல்லி புவனாவை வெட்கப்பட வைத்துவிடுவார்...

புவனாவின் சிரிப்பை பார்த்ததும்....
           - பட்ட காலிலேயே படும்... சுகவனத்தின் நிலை ...
           - நாய் வாலை நிமிர்த்த முடியாது.... சுகவனம் மனதின் நிலை...

 சரி தனக்காக ஏதோ புதிதாக செய்திருக்கிறாள் போல என நினைத்து... காபி அனுபவத்தை மறந்து...
"இது நல்ல ருசியாக இருக்குமா?... "
"இல்ல எனக்கு பிடிச்ச மாதிரி காபிபோட்டிருப்பாளோ?..." என்ற ஆவலுடன் டம்பளரை வாங்கினார்....

டி.வி.யில் அதிகாலை பக்தி பாடல் ஓடிக்கொண்டிருந்தது... அதை பார்த்துக்கொண்டே பருக ஆரம்பித்தார்...

"... இது என்ன பால் பாயசம் மாதிரி இருக்கு... ஆனா வேற கலர்ல வேற ஏதோ  கலந்திருக்குற மாதிரி இருக்கே..." என்று யோசிக்கும்போதே...

டி.வி.யில் விளம்பரம் வந்தது...
"இதுலே அதிமதுரம், வேம்பு, சுக்கு, மிளகு..... ஆயுர்வேத பொருட்கள் எல்லாம் கலந்திருக்கறதாலே...." என்று ஒரு வயதான பெண்மணி மூக்கடைத்த குரலில் சொல்லிக்கொண்டே இளம் பெண்ணிடம் கொடுக்கிறார்....

சட்டென சுகவனத்திற்கு உரைத்தது...
"அடச்சே... மசாலா டீயா... நல்ல வேலை பாயசம்னு சொல்லி மாட்டியிருப்போம்... "

"அடப்பாவிங்களா மருந்து வேணும்னா நேரடியா தேன் கலந்து சாப்பிடவேண்டியதுதானே... அதை ஏன்டா டீயில கலந்து எங்களை படுத்துறீங்க.... இத கண்டுபிடிச்சவன கூட்டிட்டு வந்து அவனேயே குடிக்கவெக்கணும்..." என்று மனதிற்குள்ளேயே கடிந்துகொண்டார்...

நிமிர்ந்து புவனாவை பார்த்து... "மசாலா டீயா..மா... (சிறு இடைவெளிவிட்டு) நல்லாயிருக்கு..." என முடித்தார்.

"ஆனா பித்தம் இருக்கறதால டீ, காபி எல்லாம் குடிச்சா, கை காலெல்லாம் 'எரியும்'...." என்று 'எரியும்' என்பதை அழுத்தமாகவே சொன்னார்...

"வெறும் தண்ணி போதும்மா.... வேணும்னா கொஞ்சம் சூடு பண்ணி கொடு...
ம்... அது வேற... இப்ப எல்லாமே ஆர்.ஓ. வாட்டர்...
ஒருத்தன் சூடு பண்ணலாம்னு சொல்றான்...
ஒருத்தன் கூடாதுன்னு சொல்றான்...
எதுக்கும் கொஞ்சம் லேசா சூடானதும் இறக்கிடு... அது போதும்..."

"அப்பாடா இனிமே தப்பிச்சோம்" என நினைத்து தப்பு கணக்கு போட்டுவிட்டார் சுகவனம்.

... அடுத்தநாள் காலை.... வாக்கிங் செல்ல தயாரான சுகவனத்தின் முன்... டம்பளரை கொண்டு நீட்டினாள் புவனா...

வெதுவெதுப்பான தண்ணீர் என நம்பி, கையில் வாங்கியதும், எந்த யோசனையும் செய்யாமல் வாயில் வைத்து உறிஞ்சிவிட்டார்... அவருடைய நம்பிக்கை தவிடுபொடியானது...

நாக்கில் ஏற்பட்ட லேசான காரம் திடீரென விஸ்வரூபம் கொண்டு தொண்டையை கவ்வியது... எதிர்பாராத இந்த தாக்குதலால் அவரது கண்களின் பார்வை ஒரு நொடி இருண்டு போனது... ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட சுகவனத்திற்கு பயம் இரு மடங்கானது...

உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது....

"ப்பா... பித்தமெல்லாம் வியர்வை மூலமா எப்படி வெளியேறுது பாருங்க..." என்றாள் புவனா... பெருமிதமாக....


"அடிப்பாவி உடம்பு மட்டுமா வேர்த்திருக்கு... கண்கள் கூடத்தான் வேர்த்திருக்கு... அது தெரியலையா...ம்..." என நினைத்துக்கொண்டு பேசா மடந்தையாக நின்றிருந்தார் சுகவனம்...

"இதுல என்ன கலந்திருக்கேன்னு கண்டுபிடிச்சிடீங்களா..." என்று புன்னகை பூத்தாள் புவனா...

எப்படியும் தனக்கு தோல்வி மட்டுமே நிச்சயம் என்ற தீர்க்கமான நம்பிக்கை ஏற்பட்டது சுகவனத்திற்கு...

சிரமப்பட்டு "என்னம்மா... சேர்த்திருக்க... இதுல..." என்றார்

சந்தோஷ மிகுதியுடன் பேச ஆரம்பித்தாள் புவனா...

"உங்களுக்கு பித்தம்னு சொன்னீங்கள்ல..." என்றாள் புவனா...

"அதான் தலைப்புச் செய்தி மாதிரி தினமும் காலையிலே சொல்லிட்டிருக்கேனே... அதுக்கென்ன...." என்றார் சுகவனம் அலுப்புடன்...

"அதான் நேத்து எங்க அம்மாகிட்ட போன்ல பேசும்போது ஏதாவது கை வைத்தியம் இருந்தா சொல்லும்மான்னு கேட்டு உங்களுக்கு வச்சு கொடுத்தேன்... பாருங்க உடம்புல இருக்குற பித்தமெல்லாம் வியர்வையா வெளியேறுது பாருங்க..." என்றாள்...

"இந்த மாதிரி "வச்சு" கொடுத்தா பித்தம் மட்டுமில்லம்மா மொத்தம் வெளியேறிடும்...அப்புறம் ஒன்னும் இருக்காது..." என்று தத்துவார்த்தமாக பேசினார் சுகவனம் ...

"போன்ல பேசும்போது" என்று புவனா சொன்னது மட்டும் சுகவனத்தின் காதுகளில் திரும்ப திரும்ப கேட்டது...
"நேத்து டி.வி. விளம்பரம், இன்னைக்கு போன்... ச்..சே... "
...ஒட்டுமொத்த டெக்னாலஜியும் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்து பெருமூச்சு விட்டார் சுகவனம்...

"அடடா... இப்படி ஒரு அரைகுறை பித்த வைத்திய குடும்பத்திலா நம்ம  பொண்ணு கட்டியிருக்கோம்...
போட்டோ காட்டும்போது ஒண்ணுமே சொல்லலியே...
ஏழு பொண்ணு அமையலேன்னு நம்ம அப்பா அம்மாவே நம்மள இப்படி வச்சு செஞ்சிட்டாங்களோ...  ம்... இதுக்கு மேல ஒன்னும் பண்ணமுடியாது...
இதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு... பார்ப்போம்...
ஆனாளப்பட்ட ரஞ்சனியவே ஆபீஸ்ல சமாளிக்கிறோம்... வீட்லயும் சமாளிப்போம்... " என்ற முடிவுக்கு வந்தார் சுகவனம்...

.....கீழே விழுவது போன்ற ஒரு உணர்வு...

திடீரென விழிப்பு நிலையை எய்தினார் சுகவனம்...

"அட..ச்...சே... இதையெல்லாம் மறக்கவும் முடியல...
நினைக்காம இருக்கவும் முடியல...
விடிஞ்சா என்ன நடக்கும்னு தெரியல...  ச்.. சே... நித்ய கண்டம் பூர்ண ஆயுசு மாதிரி ஆகிடுச்சே..." என நினைத்துக்கொண்டே...
கடிகாரத்தில் மணி பார்த்தார் ஒன்றுமே தெரியவில்லை...
ஒரு க்ஷணம் பதற்றமடைந்த சுகவனம்...
தனக்கு ஏதோ ஆகிவிட்டது என எண்ணி பயந்தார்...

"ச்.சே... கண்ணாடி போடலயா..." என சுதாரித்துக்கொண்டு...
கண்ணாடி அணிந்து பார்த்தார்... மணி 11.00 ஆகியிருந்தது...

"11.00 தானா... ரொம்ப நேரமான மாதிரி இருக்கே... ம்... இதையெல்லாம் நெனைச்சிட்டிருந்தா... இப்படித்தான்...
இனிமேலயாவது நிம்மதியான தூக்கம் வருதான்னு பார்ப்போம்...
.... மீண்டும் உறக்கத்திற்கு சென்றார் சுகவனம்...

தொடரும்...

Wednesday, 21 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 6

... சுகவனத்தின் திருமணம் 


ஒருவழியாக எண்ண அலைகளிலிருந்து விடுபட்ட சுகவனம்... கை கால் அலம்பி ஹாலுக்கு வந்தார்... அமர்ந்த கையோடு டி.வி.யை  ஆன் செய்தார்...
ஆன் செய்யும் உரிமை மட்டுமே  அவருக்கு உண்டு... ரிமோட் கன்ட்ரோல் புவனாவிடம்...

டி.வி. மட்டுமல்ல சுகவனத்தை ஆட்டுவிக்கும் ரிமோட்டும் அவளிடமே...
அவரது 31 வயதில்... தனது கட்டுப்பாட்டை (அதாவது......) புவனாவிடம் இழந்தார்...

ஹாலுக்கு வந்ததும் டி.வி.யை  ஆன் செய்ததற்கு காரணம்... மேற்கொண்டு புவனா தன்னை கேவலப்படுத்திவிடுவாளோ என்ற அச்சம்...

ஆனால் புவனா அப்படியல்ல, தேவையில்லாமல் சுகவனத்தை கேவலப்படுத்தமாட்டாள் ...
எப்போதாவது சுகவனம் தன்னை ஒரு புத்திசாலியாகவோ அல்லது அதிமேதாவியாகவோ நினைத்துக்கொண்டு பேசினாலோ, செயல்பட்டாலோ தவிர ... மற்ற நேரங்களில் சுகவனத்திற்கு கட்டுப்பட்ட மனைவியாகவே இருப்பாள்.

புவனா பேசும் போது சிலநேரங்களில் சுகவனத்திற்கு சிரிப்பு வந்துவிடும்... அப்படி சிரித்துவிட்டால் போதும்... முடிந்தது சுகவனத்தின் கதை....
அதனால் அவரது சிரிப்பின் காரணம் தெரியாத வண்ணம் டி.வி.யை  ஆன் செய்துவிடுவார்...

அன்றும் அப்படியே... டி.வி.யை  ஆன் செய்துவிட்டு இரவு உணவருந்த அமர்ந்தார்...  உணவருந்திவிட்டு "வாக்கிங்" செல்வதாக சொல்லி பக்கத்து தெருவிலிருக்கும் டீ கடையில் தனக்கு பிடித்த காபி குடித்துவிட்டு வந்து படுத்துவிடுவார்.

சுகவனம் ஒரு காபி பிரியர்... அவரது நிச்சயதார்த்தம் முடிந்ததுமே அவர் காபியை இழந்துவிட்டார்...
ஆனால் அதை அவர் உணர்வதற்கு திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆனது...

உறக்கத்தை எதிர்பார்த்து படுத்திருந்த சுகவனம்.....


"ப்பா... இப்போ எவ்ளோவோ மேல்... கல்யாணமான புதுசுல ஆசையா மனைவி கையால காபி கேட்டு அனுபவித்ததை நினைத்துப்பார்க்க புத்தி அஞ்சினாலும்...  மனம் விடவில்லை நினைவலைகளை ஓடவிட்டது..."

சுகவனத்திற்கு புவனாவை நிச்சயம் செய்வதற்கு முன் ஏழு இடத்தில் அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தை நடத்தி முடித்தனர்... இந்த விஷயத்தில் சுகவனம் தெளிவாக இருந்தார்...
"பெண் பார்க்க நான் வரமாட்டேன்... போட்டோ... காட்டுங்கள் சொல்லிவிடுகிறேன்..." என்றார்.
ஏழு பேரையும் சரி என்றே சுகவனம் சொல்லி இருந்தார்... ஆனால் அவரது பெற்றோர்கள் ஏதேதோ கரணங்கள் சொல்லி தவிர்த்தனர்... எட்டாவதாக  புவனாவின் போட்டோவை காட்டும்போது...
"சும்மா சும்மா போட்டோ காட்டாதீங்க... 'எல்லா விஷயத்தையும்' முடிச்சிட்டு என்கிட்டே வாங்க..." என்று கடிந்துவிட்டார்....

இதுவரை அவர் பார்த்த ஏழு போட்டோக்களை விட புவனாவின் போட்டோ ஏதோ வித்தியாசமாக இருந்தது....
மற்ற அனைவரும் ஸ்டுடியோவில் போட்டோ எடுத்திருந்தனர்.. ஆனால் புவனாவின் போட்டோ மட்டும் அவள் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை  மரங்களுக்கிடையே எடுக்கப்பட்டிருந்தது...

சுகவனத்தால் இதை யூகிக்க முடியவில்லை... போட்டோவை அவரிடம் கொடுத்த அவரது பெற்றோர்....
"பொண்ணு நல்ல உயரம்..." என்றனர்

பொண்ணு உயரமா இல்லை தெண்ணை மரம் உயரமா என புரியாமல்.... போட்டோவை 5 நிமிடம் உற்று பார்த்துக்கொண்டிருந்த சுகவனதிற்கு...
6வது நிமிடம், வழக்கமாக ஒரு ஆணுக்கு ஏற்படக்கூடிய குழப்பம் ஏற்பட்டது...

அவ்வளவுதான் புவனா சுகவனத்திற்கு பிடித்துப்போனாள்...
காரணம்?... இன்று வரை தெரியாது... எல்லாமே அந்த 5 நிமிடம் செய்த மாயம்...

நிச்சயதார்த்தம் முடிந்தது....

அதன் பிறகு தன் வீட்டிற்கு தெரியாமல் புவனாவை அவளது வீட்டில் சந்தித்தார் சுகவனம்.... முதல் முறை உப்பு போட்ட காபியும், அடுத்த முறை சர்க்கரையே  இல்லாத காபியையும் அருந்தும் பாக்கியம் பெற்றார்...

என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை... அப்போதெல்லாம் காபியின் ருசி அறியும் திறன் இல்லாமல்.... சுதி... மதி...இழந்து சுற்றிக்கொண்டிருந்தார்...

ஒருவழியாக திருமணம் முடிந்தது...

இரண்டு நாட்கள் கலகலப்பாக ஓடியது....

குறிப்பு:
புவனாவுக்கும், சுகவனத்தின் அம்மா சிவகாமிக்கும் ஏற்பட்ட "ஆழ்ந்த நட்புறவை" பின்பு ஒரு தனி தொடராக எழுத முயற்சிக்கிறேன்...

மூன்றாவது நாள் அதே நிகழ்வு...

நான்காவது நாளும் அதே நிகழ்வு...

கை நடுக்கத்துடன் காபி டம்பளரை வாங்கினார் சுகவனம்... மனதிற்குள்  "இறைவா... அப்படி இருக்க கூடாது...
நேற்று எனக்கு நாக்கு சரியில்லை... அதான்...
காபி நல்லாத்தானிருக்கும்... இருக்கணும்..." என்று நினைத்துக்கொண்டே டம்பளரின் உதடுகளில் தனது உதடுகளை பதிய வைத்தார்...

ஒரு நிமிட சிந்தனை...
காபியை உறிஞ்சி கண்களை மூடி ருசிப்பதா அல்லது... கண்களை மூடிக்கொண்டு குடித்துவிடுவதா என்ற மன சஞ்சலத்தின் இறுதியில் மனோதிடத்துடன்  காபியை உறிஞ்சினார்...

சுகவனம் மனதிற்குள்...
"ஐயோ... என்ன இது... இப்படி இருக்கிறது..." என்று நினைத்து
கண்களை திறந்து டம்பளரினுள் பார்த்தார்...
"நான் யாரு எனக்கே தெரியலையே..." என்ற பாடல் போல அந்த திரவத்தை மறைத்திருந்த நுரையை ஊதினார்... 
வாசனை மட்டும், தான் வழக்கமாக வாங்கிவரும் காபி தூளை நினைவுபடுத்தியது...

"இது என்ன திரவம்னே தெரியலையே..."

"ம்... மூக்கிற்கு எட்டிய வாசனை நாக்கிற்கு எட்டலையே" என நினைத்துக்கொண்டு...

தன் வாழ்நாளில் இப்படி ஒரு காபியை அருந்தியதில்லை..
எப்படி தயாரித்திருப்பாள், என்ற ஆச்சர்யத்துடன் ஆராய ஆரம்பித்தார்...

"சரி நாளைக்கு அவ வீட்டுக்கு போறோமில்லை அங்கேயும் ஒரு முறை காபி போடச் சொல்லி செக் பன்றோம்..." என நினைத்துக்கொண்டார்...

அடுத்த நாள் புவனாவின் வீட்டிலும் குடித்து பார்த்தார்... ம்.ஹும்... தன வீட்டில் அனுபவித்த அதே தண்டனைதான்...

நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு முறை அவள் வீட்டில் காபி குடிச்சிருக்கோம்... ஆனா ருசி ஞாபகமில்லையே... ச்சே... அவ்வளவு சுரனையற்று திரிஞ்சிருக்கோமே என நினைத்து...
"ம்... இதுக்கு மேல ஒன்னும் செய்யமுடியாது..." என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டார்...

சரி இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று தீவிரமாக யோசிக்கலானார் சுகவனம்...

இனிமேல் காபி குடிப்பதை நிறுத்திவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்...
காரண உபயம்... "பித்தம்".... என்று சொல்லி தப்பித்து...

"உடல் நலம் காக்க..." எனச்  சொல்லி காலையில் "வாக்கிங்" என்ற பெயரில் வெளியில் சென்று கடையில் காபி குடிக்கலாம் என்ற வழிமுறையை கண்டுபிடித்தார்...

பின் விளைவுகளை யோசிக்காமல்...
 தொடரும்.... 

Tuesday, 13 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 5

...வீ(வி)ட்டில் சுகவனம்


மேலதிகாரி ரஞ்சனியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சுகவனம் அன்றைய பொழுதில் தான் எதையோ சாதித்துவிட்டதை போல் எண்ணி,
நேர் கொண்ட பார்வை... நிமிர்ந்த நன்நடையோடு...வீட்டினுள் நுழைந்தார்...

நுழையும்போதே பரபரப்புடன் கைககள் சட்டை பட்டன்களை கழற்ற... காலிலிருந்த செருப்புகளை அப்படியே உதறியவாறு உள்ளே நுழைந்தார்..

நேரே பெட்ரூம் சென்ற சுகவனம் ஃபேன் ஸ்விட்ச்சை போட்டார்... தன்னுடைய விரலசைவில் ஃபேன் சுழல்வதை நினைத்து பெருமிதம் அடைந்தார்.

"அதானே சுத்திதானே ஆகணும்...." என்று முணுமுணுத்தார்...

சுகவனத்தின் மனைவி, புவனேஸ்வரி - அபார அறிவு - எல்லா மனைவிகளையும் போல்...

சுகவனத்திற்கு ஏற்ற ஜோடி...
எதிர் எதிர் துருவங்கள் ஒன்றோடொன்று ஈர்ப்புடையது என்பது இயற்பியல் - அந்த இயல் மனித குலத்திற்கும் உண்டென்பது இயற்கை...

கணவன் நடந்து வரும் காலடி சத்தத்தை கொண்டே.. இப்படி நடந்தால் செருப்புகள் எப்படி இருக்கும், வாசலில் போட்டுவைத்திருந்த மேட் எப்படி நகர்ந்திருக்கும், அடுத்து எப்படி அவர் அணிந்திருக்கும் ஆடைகள் களைந்து வீசுவார் என்று  எல்லா மனைவிகளையும் போல் எளிதாக யூகித்துவிடுவாள் புவனா.

அன்றும் அதுபோலவே நடந்தது...

ஃபேன் காற்றை அனுபவித்தவாறே... "உஸ்ஸ் ..." என்று காற்றை ஊதுவது போல் இன்றைய அலுவலக சவால்களை ஊதிவிட்டதாக எண்ணி சட்டையை கழற்றி பெட் மீது வீச துணிந்தார்...

சமையலறையிலிருந்து குரல் வந்தது....
"சட்டைய ஹங்கேர்ல மாட்டுங்க...." என்றாள் புவனா....

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார் சுகவனம்...
அவளுக்கு எப்படி தெரியும்... ஒரு வேல... கேமரா ஏதும் வைச்சிருப்பாளோ என யோசிக்கலானார்...

அலுவலகத்தில்தான் விட்டுட்டோம்... அந்தம்மா கிட்ட தலைகுணிய வேண்டியதாயிடுச்சு.... வீட்ல விடக்கூடாது என மனதிற்குள் நினைத்துக்கொண்டார்....

சமையலறையிலிருந்து புவனா வந்தாள்... பேசிக்கொண்டே....

"ஏன் செருப்ப அப்படி எறிஞ்சிட்டு வந்திருக்கீங்க?..."

"ஏன் மேட் அப்படி நகர்ந்திருக்கு?... "

"சட்டைய கழட்டுனா ஹங்கேர்ல மாட்ட வேண்டியதுதானே ?...."

"வெளியில போயிட்டு வந்தா, கை காலெல்லாம் கழுவிட்டு வர வேண்டியதுதானே..."

"சின்ன பிள்ளைக்கு சொல்லற மாதிரி தினமுமா சொல்லுவாங்க?..."

அடுத்தடுத்த கேள்விகளால் அதிர்ந்து போனார் சுகவனம்...

விழி பிதுங்கி நின்ற சுகவனத்தைப் பார்த்து...

"ம்.... இதுல ஒன்னும் குறைச்சலில்ல..." என முடித்தாள் புவனா...

எப்படியும் இன்று விட்டுக்கொடுப்பதில்லை என்று முடிவு செய்த சுகவனம்... தன் மனதிற்குள் தயாரானார்...

"விதி வலியது..."
எதையும் அனுபவித்த பிறகே சுகவனம் இந்த வாசகத்தை சொல்வார்.... காரணம் அதுபோன்ற அனுபவங்களிலிருந்து சிக்காமல் தப்பிக்க அவருக்கு தெரியாது...

"எவ்ளோ பெரிய ரிப்போர்ட் தெரியுமா?..."
"எவ்ளோ பெரிய Turn-over தெரியுமா?..."
"எத்தனை லட்சம்... எவ்ளோ டென்ஷன் தெரியுமா?..." என்று முயற்சி செய்து கேட்டுவிட்டார் சுகவனம், விளைவுகளை யோசிக்காமல்...

சுகவனம் தப்புக்கணக்கு போட்டது ரிப்போர்ட்டில் மட்டுமல்ல... தன் மனதிலும் கூட ....


கேள்வி கேட்டுவிட்டு, இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிமிர்ந்து புவனாவை பார்த்தார்...

சுகவனம் அந்த நிறுவனத்தில் சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகிறது... அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த போது, அங்கு நடப்பவைகள் ஒன்று விடாமல் புவனாவிடம் "discuss" என்ற பெயரில் ஒப்பித்துவிடுவார்..

நிச்சயதார்த்தம் முடிந்த ஆண்கள் எப்படி உணர்ச்சிவயப்பட்டு... தன்னுடைய மற்றும் தன் குடும்பம் சார்ந்த விவரங்களை, சுயக்கட்டுப்பாடின்றி... பின் விளைவுகள் பற்றி ஆராயும் திறனிழந்து... உளறிவிடுவார்களோ அது போல...

திருமணத்திற்கு பிறகு....

"ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"...
"தன் வினை தன்னைச் சுடும்"...
 "வினை விதைத்தவன் வினையறுப்பான்"....
என்பன போன்ற வாசகங்களை மட்டுமே பேசக்கூடும்...

அது போலவே சுகவனதின் நிலையும்....

....ஆரம்பித்தாள் புவனா....

"சும்மா குதிக்காதீங்க.....

"உங்க ஆபீஸ் Turn-overக்கு நீங்க என்ன செஞ்சீங்க..."

"யாரோ வெய்யில்லேயும் மழையிலேயும் திரிஞ்சி சேல்ஸ் பண்ணிட்டு வர்றாங்க.... அந்த விவரத்தை பேப்பர்ல பார்த்து "எக்ஸல்ல (ms-excel)"டைப் பண்ணி பிரிண்ட் எடுத்து கொடுக்கறதிலேயே 1008 தப்பு..."

"நானா இருந்தா நீங்க கொடுக்கற ரிப்போர்ட்டை கிழிச்சி உங்க மூஞ்சிலேயே எரிஞ்சிருப்பேன்..."

"அப்பகூட என்ன தப்புனு உங்களுக்கு புரியாது..."

"சும்மா.... இங்க வந்து அலட்டிக்கீறிங்க...."

பேய்-அரைந்தாற்போல் நின்றார் சுகவனம்....

"ஆகா... கிழிச்சிஎரிஞ்சது இவளுக்கு எப்படி தெரியும்..."

"ஆபீஸ்ல நடந்தத இவ்ளோ தெளிவா சொல்லறாளே..."

"ம்ஹூம் .... இதுக்கு மேலயும் நம்ம ஆபீஸ் வேலையோட பெருமையை இவகிட்ட பேசக்கூடாது... இப்படி அசிங்கப்படுத்திட்டாளே... ச்சே..."

"அப்போ ரஞ்சனிக்கு பதில் யார் இருந்தாலும் நம்ம கதி இதுதானா... இது தெரியாம போச்சே..." என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் சுகவனம்.

எப்போதுமே நமக்கு ஓரிடத்தில் உருவாகும் கேள்விகளுக்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில்... எதிர்பாராத விதமாகத்தான் பதில் கிடைக்கும்... அது போலத்தான் சுகவனத்திற்கு ஆபீஸ் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு புவனா மூலமாகத்தான் விடை கிடைக்கும்...

அப்படியொரு முக்கியமான ரிப்போர்ட்டை தயாரிக்கும் தனக்கு என் இப்படி நடக்கிறது என்பது அவருக்கு புரிந்தது...

நிறுவனத்தின் வருமானத்திற்கும் தனக்கும் பெரிய சம்பந்தம் ஒன்றுமில்லை என்பதை புரிந்துகொண்டார் சுகவனம்...

நிமிர்ந்து பார்த்தார் சுகவனம்... புவனா அங்கில்லை... எப்போது போனாள் என தெரியவில்லை... சமையலறையிலிருந்து குரல் வந்தது...

"ஆபீஸ்ல நடந்ததையே நினைச்சுட்டு இருக்காம... குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்..." என்றாள் புவனா...

ஆபீஸில் தனக்கு ஏற்படும் அனுபவங்களை யாரோ புவனாவுக்கு தெரிவிக்கிறார்கள் என்ற சந்தேகம் எப்போதுமே சுகவனத்திற்கு உண்டு...

தொடரும்....