அலுவலகத்தை நோக்கி
சுகவனம் ஒரு பயணப் பிரியர் .... வீட்டிலிருந்து அலுவலகம் சென்று வருவதைக் கூட ஒரு குட்டி சுற்றுலா போல அனுபவிப்பார்... காலை 7.45க்கு எல்லாம் 'தனது' வீட்டிலேயே சிற்றுண்டியை முடித்து விடுவார், பிறகு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவார், இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் இரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் எதிரில் உள்ள, தனது நண்பன் வீட்டின் முன்புறம் யாருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் ஓரமாக நிறுத்திவிட்டு, வீட்டினுள் சென்று நண்பனை பார்த்து சைகை செய்துவிட்டு வண்டி சாவியை கொடுத்துவிட்டு இரயில்வே ஸ்டேஷன் சென்றுவிடுவார்.சுகவனத்திற்கு தேசப்பற்று மிக அதிகம், இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உறுதிமொழியை இந்த 47 வயதிலும் மறவாமல் பின்பற்றுபவர். இரயிலினுள் ஏறியதும் ஜன்னலோர இருக்கையை கண்டுபிடிக்க தனது விழியை தான் அணிந்திருக்கும் Progressive Lens மூக்குக்கண்ணாடி வழியாக வீசுவார், கிடைத்தால் சரி, இல்லையெனில், எந்த சகோதரனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கலாம் என ஆராய்வார்.... இறுதியில் தன்னை விட சிறிய உருவமாகவும், பார்க்க பரிதாபமாகவும் இருப்பவர்களை அணுகுவார்... எப்படியும் தான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதற்குள் சில நொடிகளாவது அமர்ந்துவிட்டால் சந்தோஷம்.... இல்லையென்றால்....
'ச்சே... நாட்டிலுள்ள யாருக்கும் ஒரு சின்ன courtesy கூட இல்ல...
நான் ஏறத்துக்கு முன்னாடியிருந்தே உக்கார்ந்து தானே வர்றாங்க...
ஒரு 2 ஸ்டேஷன் எனக்கு இடம் கொடுக்கலாம்லே...'
என அலுத்துக்கொள்வார். அதே சமயம் அவர் அமர்ந்திருந்தால் யாருக்காகவும் தன் இருக்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்...
12 நிமிட இரயில் பயணத்தை முடித்து அங்கிருந்து தனது 35 நிமிட பேருந்து பயணத்தை தொடங்குவார்...
பேருந்தில் நிச்சயம் உட்கார இடம் கிடைக்காது என்பது அவருக்கு தெரியும், இருப்பினும் அந்த காலை வேளையில் எப்படியாவது இடம்பிடித்துவிட்டால்...
தன்னைப்போல் ஒரு திறமைசாலி யார் என்ற மமதையுடன் அமர்ந்திருப்பார்.....
இல்லையென்றாலும் இடம் தேடி பேருந்தினுள்ளேயே கூட்ட நெரிசலினூடே நடக்க முயற்சி செய்வார். நகர கூட முடியாது என்று தெரிந்தால், அப்படியே ஒரு ஓரமாக நின்றுகொண்டு தனது செல்போனை எடுத்து, யாருக்கு போன் செய்தால் எடுப்பார்கள்..., யாரை வெறுப்பேற்றலாம், யார் தன்னை திட்டமாட்டார்கள்... என ஆராய்ந்து அழைப்பார்,
"Hello Sugavanam here...
....Mr. Bala can I (கேணை).... speak now..."
என்று பொடி வைத்து பேசுவார்...
எதிர்முனையில் பேசுபவர் எதோ விஷயம் இருக்கும் என நம்பி பேசுவார்
...."சொல்லுங்க சுகவனம்..."
சுகவனம் "என்னடா பாலா... நீ ஒரு ஆளா..." என்பார்..... சிரித்துக்கொண்டே...
பாலாவிற்கு இந்தப் பெரியவரிடம் கோபப்படுவதா வேண்டாமா என தெரியாமல் இணைப்பை துண்டித்துவிடுவார்....
சுகவனம் "அடப்பாவி... டென்ஷன் ஆயிட்டான் போல...." என்று சொல்லிக்கொண்டே....
அடுத்து யாரை வம்பிழுக்கலாம் என தனது போனில் உள்ள contact list ஐ ஆராய்வார் ...
அடிப்படையில் அவருடைய கணக்கு என்னவென்றால்...
எப்படியாவது நேரத்தை டென்ஷன் இல்லாமல் கடத்த வேண்டும்....
பிறரை டென்ஷன் செய்தல் என்ன... என்ற ஒரு தொலைநோக்கு சிந்தனை தான்...
சரியாக அலுவலக நேரத்திற்கு 2 அல்லது 3 நிமிடம் முன்புதான் அலுவலகத்திற்குள் நுழைவார்.... முன்கூட்டியே வந்தாலும் வெளியிலேயே நின்று அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்....
ஒருமுறை, சுகவனத்தின் சக ஊழியரான வினோத், 'ஏன் சுகு (சுகவனம் - பெயரின் corporate வடிவம்) டூ வீலர்லயே வரலாம்லே?' என கேட்டார்... சுகவனம் வழக்கம் போல் தனது வியாக்யானத்தை ஆரம்பித்தார்.... 'ஏன்டா உனக்கு... நான் jollyயா இருக்கிறது பிடிக்காதே.... வீட்ல இருந்து விடுபட்டு enjoy பண்ணத்தான் ஆபீஸ்க்கு வர்றேன்... நான் பாட்டுக்கு வண்டி ஓட்டிட்டு வருவேன்... வேடிக்கை பார்த்துகிட்டே... எப்படியும் ஏடாகூடமாத்தான் ஓட்டிட்டு வருவேன்.... போற வர்றவன் எல்லாம் என்னை திட்டிட்டு போவான்.... நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காது... உடனே எதாவது சொல்லுவேன், தேவையில்லாம என்னால 3வது உலகப்போர் வரணுமா...." என்பார்...
ஒரு முறை "ஏன் சுகு... 2 தெரு வர்றதுக்கு வண்டி எதுக்கு?... வித்துடலாமே?" என யதார்த்தமாக கேட்டான் வினோத்....
சுகவனம் "ஆமாண்டா நானும் அதையேதான் யோசிக்கிறேன் .... "வாங்குன விலைக்கே" யாராவது கேட்டல் வித்துடலாம்னு பார்க்குறேன் ஒருத்தனும் ஒத்து வர மாட்டேங்குறாங்க.... உனக்கே தெரியும் ஒரு நாளைக்கு 2 தெரு தான் ஓட்டறேன் .... நீயே வாங்கிக்கிறீயா சொல்லுடா .... இப்போவே முடிச்சிக்கலாம்"னு.... சொன்னாரு....
அதோட சரி வினோத் அவரை சீண்டி பார்குறதயே விட்டுட்டான்.....
தொடரும்..... (....அலுவலக அலப்பறைகள்)
No comments:
Post a Comment