சுகவனத்தின் "ஸ்மார்ட்" ஃபோன்
சுகவனத்தின் முன் வந்து நின்றார் தண்டபாணி...."என்ன சார் பேசிட்டீங்க போல... லேசா கேட்டுச்சே...
3500 ரூபாய்ன்னு... காதுல விழுந்துச்சே...." என்றார் சுகவனம் ஆர்வத்துடன்...
"ஆ...ஆமா சார்... மேனேஜர்கிட்ட உங்க எதிர்ப்பார்ப்பை பற்றி எடுத்துச் சொன்னேன்... அவரும் நல்ல ஐடியா கொடுத்தாரு..."
என சொல்லிக்கொண்டே அலமாரியிலிருந்த சுமார் 4800 ரூபாய்க்கு ஆரம்பித்து இறுதியாக 3500 ரூபாய்க்கு விற்கக்கூடிய தகுதி வாய்ந்த
"Telkon - 'U will feel'" (டெல்கான் - யூ வில் ஃபீல்) மொபைலை எடுத்து வைத்தார் தண்டபாணி...
"என்னதிது?...... இதெல்லாம் வேணாம்பா... இதை எடுத்த இடத்திலேயே நைசா வச்சிடுங்க... நாம "சாம்சங் கேலக்ஸி ஏ9"லேயே என்ன பண்ணமுடியும்னு பாக்கலாம் வாங்க..." என்றார் சுகவனம்..
மறுபடியும் தண்டபாணியின் மனம் தடுமாற ஆரம்பித்தது....
"என்னடா இது... இந்தாளு மறுபடியும் முருங்கை மரத்திலே ஏறிட்டாரு...
திரும்பவும் மேனேஜர்கிட்ட போனா... திட்டுவாரு... வேற யார்கிட்டயாவது... இவரை தள்ளிவிட்டாலும்... அவனுக வியாபாரம் பண்ணிட்டா... அதை வெச்சே நம்மள கேவலப்படுத்துவானுங்க.... ச்.சே... இன்னைக்கு யாரு முகத்தில முழிச்சோம்... "
என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டார் தண்டபாணி...
அதிகாலை எழும்போது உள்ளங்கைகளை ஒன்றாக வைத்து தேய்த்துவிட்டு அதில் கண் விழித்தால்... அந்த நாள் முழுவதும் நல்ல ஆற்றலோடு இருக்கலாம்... என்று ஒருவர் சொன்னதிலிருந்து அதையே வழக்கமாக வைத்திருந்தார் தண்டபாணி...
தனது உள்ளங்கையின் முழு ஆற்றலையும் உணரும் நாள் இது என்பதை தண்டபாணி அறிந்திருக்கவில்லை...
"என்னப்பா... இவ்ளோ யோசிக்கிற... அது என்ன... டெல்கானா... செல்கானா..? அத எடுத்து வச்சிட்டு வாங்க "சாம்சங் கேலக்ஸி ஏ9" விலையை எப்படி குறைக்கணும்னு சொல்லறேன் வாங்க..."
காசு நிறைய வைச்சிருக்கிறவங்க கிட்ட அதே விலைக்கு விக்கலாம் தப்பில்லே... நமக்கெல்லாம் அந்த விலை ஒத்துவராது.... நானும் உன்னை மாதிரிதான்ப்பா...." என்றார் சுகவனம்.. எப்படியும் தண்டபாணி தன் வசமாகிவிடுவார் என்ற நம்பிக்கையோடு...
சுகவனம் சற்றும் எதிர்பாராத விதத்தில்...
"நான் "சாம்சங் கேலக்ஸி ஏ9" எல்லாம் வாங்கமாட்டேன் சார்..." என்றான் தண்டபாணி...
சற்றும் தாமதிக்காமல்... "தெரியும்ப்பா... அதுக்கு அடுத்த மாடல்தான் வாங்குவீங்க..." என்றார் சுகவனம்...
உடனே.. தனது பேசிக் மாடல் ஃபோனை எடுத்து மேஜை மீது வீசுவது போன்ற பாவனையுடன் ஓசை வரும்படி போட்டார் தண்டபாணி...
அடுத்த வினாடி... தனது பாக்கெட்டில் ஒளிந்திருந்த தன் பேசிக் மாடல் ஃபோனை எடுத்து மெதுவாக தண்டபாணியின் ஃபோன் அருகே வைத்தார்...
சுகவனம் வைத்திருந்த ஃபோனுக்கு குறைந்து, வேறு மாடல் இல்லை என்பது, மொபைல் ஃபோன் வியாபாரத்திலேயே இருப்பதால் தண்டபாணிக்கு தெளிவாக தெரிந்தது....
"தம்பி இந்த ஃபோனை எடுத்து உள்ளே வைங்க... உங்க டைட் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்லே இன்னொரு பெரிய ஃபோன் தெரியுது பாருங்க... அது ஏ9-ஆ கூட இருக்கலாம்லே... சும்மா இப்படியெல்லாம் யோசிச்சு என்னை சமாளிக்க நினைக்காதீங்க..." என்றார் சுகவனம்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுகவனத்தின் நினைவில்... அவரது மேனேஜர் ரஞ்சனி திட்டியது நினைவுக்கு வந்தது...
"உங்க அறிவை பயன்படுத்தாதீங்க... நான் சொல்றதைமட்டும் செய்ங்க..."
ஆங்கிலத்தில்... "Don't use your brain... simply do what I say..?"
ரஞ்சனியிடம் வாங்கிய திட்டுகளிலேயே சுகவனத்திற்கு மிகவும் பிடித்த திட்டுகளுள் இதுவும் ஒன்று...
இந்த வாசகத்தை தண்டபாணியிடம் பயன்படுத்த முடிவு செய்த சுகவனம்...
"புத்திசாலித்தனமா செயல்படறீங்க... தண்டபாணி... ஆனா அதனால எந்த பிரயோஜனமும் இல்லை... நான் சொல்றதை மட்டும் செய்யுங்க..." என்றார்...,
தான் கற்றதை பயன்படுத்திவிட்ட திருப்தியுடன் (கற்றபின் நிற்க அதற்கு தக)...
"ச்..சே... பாக்கெட்லே இருக்கிறது "கேலக்ஸி ஏ9"ன்னு எப்படி கண்டுபிடிச்சாரு... ஆண்டவா... இப்படி மாட்டிக்கிட்டனே... எப்படி தப்பிக்கப்போறேன்னு தெரியலையே... முடிய பிச்சிக்கலாம் போல இருக்கே..." என்று மனமாற அவஸ்தை பட்டுக்கொண்டிருந்த தண்டபாணியிடம்...
"தம்பி "கேலக்ஸி ஏ9" எப்படி வாங்கணும்ன்னு எனக்கு தெரியும்... முதல்ல ஒரு பேப்பர் பேனாவை எடுங்க... "கேலக்ஸி ஏ9" ஃபோனையும் எடுங்க..." என்றார் சுகவனம்...
தண்டபாணிக்கு ஒன்றுமே புரியவில்லை... தன் பாக்கெடில் இருந்தது "கேலக்ஸி ஏ9" தான் என்பதை வெளியில் எடுக்காமலேயே கண்டுபிடித்ததிலிருந்து... தன் சுய சிந்தனையை இழந்திருந்த தண்டபாணி
பேப்பர் பேனாவுடன் தயாரானார்...
"தேவைக்கு செலவு செய்யும் போது பிரச்சனை இல்லை.. ஆனா வசதிக்கு செலவு செய்யும் போதுதான் கஷ்டம்...
வசதிக்கும் வீணடிப்பதற்கும் செலவு செய்துதான் நம்ம நாட்டுல விலைவாசியெல்லாம் இப்படி ஏறி இருக்கு..." என்றார் சுகவனம்...
தண்டபாணிக்கு, லேசாக புரிந்தது போலும் புரியாதது போலும் இருப்பது புரிந்தது....
"இப்படி விளக்கமெல்லாம் கொடுக்கறாரு... அடுத்து என்ன கேக்கபோறாருன்னு தெரியலையே..." என்று திகைத்து நின்றிருந்த தண்டபாணியிடம்....
"தேவை இல்லாத வீணான விஷயங்களை எடுத்திட்டாலே போதும்...
ஏ9... நமக்கு ஏத்த விலைக்கு வந்திடும்..." என்று முடித்தார் சுகவனம்...
தண்டபாணியின் உடல்... பொருள்... ஆவி... எல்லாம் தனித்தனியாக தெரிந்தது...
"ஏ9"னோட டெக்னிக்கல் டீடைல் சொல்லுங்க..." என்றார் சுகவனம்...
"128 ஜி.பி. ஸ்பேஸ் (சேமிப்பு இடம்) 8 ஜி.பி. RAM இருக்கு சார்.." என்றார் தண்டபாணி..
"1 TB ஹார்ட் டிஸ்க்கே 3500 ரூபாய்க்கு உதைப்படுது தெரியுமா... 128 ஜி.பி. எதுக்குப்பா ஃபோனல..." என்றார் சுகவனம்...
"சார்.. குறைஞ்சது 30 படத்துக்கு மேல அதுவும் (HD)ஹச்.டி-ல ஸ்டோர் பண்ணி வெக்கலாம் சார்.." என்று ஆர்வமாக சொன்னார் தண்டபாணி..
"ம்... ஸ்டோர் பண்ணிவச்சு... நான் போட்டிருக்கற லென்ஸோட பவர் என்னன்னு தெரியுமா... இதுக்குமேல பவர் ஏறுச்சினா லென்ஸ் கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க... தவிரவும்... படமெல்லாம் தியேட்டர்ல பாக்கணும்... இதைவிட பெரிய ஸ்கிரீன்... வெறும் 120 ரூபாய்தான்... தலைக்கு பின்னால இருந்தெல்லாம் சவுண்ட் வருதுப்பா...தெரியுமா..."
அப்பாடா ... ஒருவழியாக முடித்துவிட்டார் என்று நினைக்க முற்பட்ட தண்டபாணியின் மனதில் சுகவனம் சொன்ன வார்த்தைகள்... பெரிய பாறாங்கல்லாய் வந்து விழுந்தது... தண்டபாணியின் ஆவி நிலைகுலைந்தது...
"அதனால அதை குறைச்சிடுங்க... எனக்கு அவ்வளவு ஸ்டோரேஜ் வேண்டாம்... 28 ஜி.பி. ஸ்பேஸ் 4 ஜி.பி. RAM-ஏ அதிகம்... "
"அடுத்து... கேமரா பத்தி சொல்லுங்க..." என்றார் சுகவனம்...
"24,10,8,5 எம்.பி.ன்னு 4 கேமரா இருக்கு... " என்று எவ்வித உணர்ச்சியுமின்றி சொன்னார் தண்டபாணி...
"என்னப்பா இது... டைலர் பேண்ட் அளவு சொல்ற மாதிரி சொல்ற... நான் என்ன சினிமா படமா எடுக்க போறேன்... சரி இந்த மாடலுக்குன்னு மரியாதைக்காக ஒரு 10 எம்.பி. கேமரா போதும்... கேமராவால ஏகப்பட்ட பிரச்சனைப்பா... வெளியில சொல்ல முடியாது..." என்ற சுகவனம் தொடர்ந்து...
"சரி இப்போ நான் சொன்ன கான்பிகரேஷன்க்கு என்ன விலையாகும்னு சொல்லுங்க..." என முடித்தார்...
ஒரு நொடி ஸ்தம்பித்துபோனாலும் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி...
"சார் இதை பாருங்க... நீங்க சொன்ன கான்பிகரேஷன்தான் இந்த மாடல்ல இருக்கு... "Telkon - 'U will feel'" (டெல்கான் - யூ வில் ஃபீல்)" என்று ஒருவழியாக சுகவனத்தை சமாளித்துவிடலாம் என நினைத்து... அந்த ஃபோனை எடுத்து காண்பித்தார்...
"என்னைய்யா மடல் அது "யூ வில் ஃபீல்"... அப்படின்னா... வாங்கினப்புறம் ஏன்டா வாங்கினோம்னு ஃபீல் பண்ணுவோம்கிறத சிம்பாலிக்க சொல்லற மாதிரி இருக்கே...
அப்படியே பார்த்தாலும்... ஏ9 மாதிரி பெரிய டிஸ்பிளே (திரை) இல்லையே... " என்ற சுகவனம்...
"சரி... ஒன்னு பண்ணுங்க... அந்த டிஸ்பிளே எடுத்து இதுக்கு மாத்தி கொடுத்திடுங்க... வேணும்னா மேற்கொண்டு 500 ரூபாய் போட்டு மொத்தமா 4000 ரூபாய் கொடுத்திடுறேன்... அதே 100 செக் லீப் அப்படியே இருக்கு... 40 ரூபாய் ஒரு மாசதுக்கு... என்ன சொல்றீங்க?..." என்றார் சுகவனம்...
மீண்டும் ஒரு முறை வெறுத்துப்போன தண்டபாணியின் ஆவி அவனது கூட்டிலிருந்து வெளியே வந்து அவனது உடலையும், மனதையும் ஏளனமாக பார்த்து சிரித்துவிட்டு மறுபடி உள்ளே சென்று ஒடுங்கிவிட்டது...
நிலைகுலைந்த தண்டபாணி... மேஜையை இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்...
பேசாம நாமளே காசு கொடுத்து வாங்கிகொடுத்திட்டு அப்புறம் 100 மாசத்துக்கான செக்க நாம வாங்கிக்கலாம் என்று அவன் மனம் யோசித்த அடுத்த க்ஷணம் அவனது அறிவு அலறியது...
"அடேய்... மடையா... என்ன யோசனை இது... இதை விட நீ வேலையை விட்டே போய்விடலாம்..." என்று... அசரிரீ போல் தண்டபாணிக்குள் கேட்டது...
"ஆம்... அதுதான் சரி... இன்னைக்கே ரிசைன் பண்ணறோம்... " என்று அவனது மனம் சிந்திக்க தயாரானது...
"ச்.சே... என்ன மானங்கெட்ட மனம் இது... எதை கேட்டாலும் ஆராயாமல் இப்படி ஓடுகிறதே..." என்று அவன் அறிவு, சிந்தனையை வீசியது...
"ஆமாமில்ல என்ன இப்படி புத்திகெட்டு சிந்திக்க ஆரம்பிச்சுட்டோம் என அவன் மனம், அவனது அறிவு வீசிய சிந்தனையை தொடர ஆரம்பித்தது..."
சிலையாக நின்றிருந்த தண்டபாணிக்குள் ஓர் ஞான விசாரணையே நடந்துகொண்டிருந்தது...
ஓரளவு தண்டபாணியின் நிலையை அவனது இமைக்காத கண்கள், அசையாத உடல் மூலமாக புரிந்து கொண்ட சுகவனம்... மேற்கொண்டு ஏதாவது கேட்டல்... இவன் மூர்ச்சையாகி விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்து..
தண்டபாணியை தடுத்தாட்கொள்ள முடிவு செய்தார்...
மெதுவாக தண்டபாணியின் கைகள் மீது தனது கைகளை வைத்து... மெல்லிய குரலில்... "தம்பி... " என்றார்...
தண்டபாணியின் கண்கள் இமைக்க ஆரம்பித்தது...
கண்களில் தண்ணீர் நிரம்பி இருந்தது... நல்ல வேலை மதகுகள் எதுவும் உடையவில்லை...
நிரம்பிய தண்ணீர் மீண்டும் கண்களுக்குள்ளேயே சென்றுவிட்டது...
"தம்பி... என் தேவையை புரியவைக்கவே டைம் ஆகிடுச்சு... ஒன்னும் அவசரமில்லை... பொறுமையா உங்க மேனேஜர்கிட்ட பேசி... என்னோட தேவையை அவருக்கு புரியவைங்க... நான் நாளைக்கு வந்து பார்க்குறேன்..." என்று சொல்லிவிட்டு பதிலேதும் எதிர்பார்க்காமல் "பூர்ணவிகா"விலிருந்து வெளியேறினார்...
தண்டபாணி சுதந்திரமாக சுவாசிக்கலானார்...தற்காலிகமாக....
சொன்னபடியே அடுத்த நாள் "பூர்ணவிகா" வந்த சுகவனத்தின் கண்களில்... தண்டபாணி தென்படாததால், விசாரித்தார்... விசாரணையில், தண்டபாணிக்கு "குளிர் ஜுரம்..." விடுமுறையில் இருப்பதாக தெரிந்துகொண்டார்...
"சின்ன பையன்... இன்னும் அதனுபவம் போதலை..." என்று கிளம்ப எத்தனித்த சுகவனத்தை...
தண்டபாணியின் இந்நிலைக்கான காரணத்தை அறியாமல்...
"வணக்கம் சார்... நான் நாகராஜ்... தண்டபாணிக்கிட்ட கேட்டது என்னன்னு என்கிட்டே சொன்னா... நான் உங்களுக்கு உதவி செய்யறேன்..." என்றான் ...
நாலு பேரிடம் சொன்னால் தப்பில்லை... யாராவது ஒருவர் மூலம் தனக்கு தேவையான "சாம்சங் கேலக்ஸி ஏ9" ஃபோன் கிடைக்கும் என நம்பி... நாகராஜிடம் விளக்க ஆரம்பித்தார் சுகவனம்...
நாகராஜின் நிலை = ?...
தொடரும்...
No comments:
Post a Comment