சுகவனத்தின் "ஸ்மார்ட்" ஃபோன் தேடல்
நேரம் சரியாக மாலை 6.30....ஏகப்பட்ட வணிக மையங்கள் மின் விளக்குகளால் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளும் போட்டியில் முனைப்புடன் பிரகாசிக்க ஆரம்பித்தன...
அமாவாசை பௌர்ணமி என எந்த தொடர்புமில்லாமல் இரவில் பிரகாசிக்கக்கூடிய வீதிகள் அவை...
"ப்...பா... எவ்ளோ லைட்ஸ்..., எவ்ளோ கரண்ட் பில் வரும்... நம்ம 5 நிமிஷம் ஃபேன் ஆஃப் பண்ணாம விட்டாலே அரை மணி நேரம் கிளாஸ் எடுப்பா...
இங்க எப்படி?!... யாருக்குமேவா கல்யாணமாகியிருக்காது?!..."
என பிரமித்துக்கொண்ட சுகவனம் ஒருவழியாக "பூர்ணவிகா" கடை முன் பிரவேசித்தார்...
முழுக்க கண்ணாடி, கதவு எது சுவர் எது என கண்டறிய முடியாத வண்ணம் திறம்பட அமைத்திருந்தனர்...
இதுதான் கதவு என கண்டுபிடிக்க வசதியாக கண்ணாடியிலேயே வட்ட வடிவிலான பூ வேலைப்பாடு கொண்ட கைப்பிடி... அதனருகில் "PULL" என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது...
வழக்கம்போல் சுகவனம் அதைப் பார்த்து "புள்"னா "தள்"ளு... அதானே ரைமிங்கா வருது என முடிவு செய்து, சற்றே கம்பீரத்தோடு "புள்"ளினார் (தள்ளினார்)
ம்...ஹும்... லேசான கிரீச் சத்தத்தோடு நின்றது...
தன்னுடைய கம்பீரமான கட்டளைக்கு அடிபணியாத அந்தக் கண்ணாடிக் கதவை மேலும் கீழும் முறைத்துப் பார்த்தார்.....
உள்ளே இருந்த "பூர்ணவிகா" பணியாள்... புரிந்துகொண்டு... உள்ளிருந்து கதவை தள்ளி சுகவனத்தை "வண்க்கம்" என தமிளில் கூறி வரவேற்றார்...
"ம்...அதென்ன நீங்க தள்ளினா மட்டும் திறக்குது... நாங்க தள்ளினா திறக்காதா?... கஸ்டமர்தான் பாஸ் முக்கியம்.... கஸ்டமருக்கு ஏத்தமாதிரி கதவை மாத்துங்க... உங்களுக்கு நாங்கதான் முக்கியம்...." என கூறிவிட்டு எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் மிடுக்காக உள்ளே நடந்து சென்றார்....
வினோத் காண்பித்த "சாம்சங் கேலக்ஸி ஏ9" மனதில் வைத்துக்கொண்டு அனைத்தையும் நோட்டமிட்டார்.....
பிறகு மெதுவாக ஒரு விற்பனையாளரை தேர்ந்தெடுத்த சுகவனம்....
" உங்க பேரு தம்பி...." என கேட்டார்...
"தண்டபாணி... சார்..." என்றார் அந்த விற்பனையாளர்...
"தண்டபாணி சார்... என்பது முழு பேரா... வித்தியாசமா இருக்கே..." எனச் சொல்லி... உரக்க சிரித்தார்....
"சும்மா தமாஷ்...." என்று லேசாக கண் சிமிட்டினார்... தன்னுடைய ஹாஸ்ய உணர்வை வெளிப்படுத்திவிட்டதாக நினைத்து...
"ம்...இருக்குற பிரச்னை போதாதுன்னு இது வேறயா..." என நினைத்துக்கொண்டு... வேறு வழியின்றி லேசான புன்னகையை உதிர்த்தார் தண்டபாணி...
சற்றே யோசிப்பது போன்று.... யோசித்து
"...சாம்சங்.... கேலக்ஸி.... ஏ9... எவ்ளோ ஆகுது..." என கேட்டார் சுகவனம்
ஃபோனை எடுத்து சுகவனத்தின் முன் வைத்த தண்டபாணி
"முப்பத்தி ஆறாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு ரூபாய் சார்..." என்றார் தண்டபாணி
ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போன சுகவனம்...
"ஒரு ஃபோனோட விலையா ... எதனால...?..." என்றார் சுகவனம்
"லேட்டஸ்ட் மாடல் சார், எல்லா டெக்னாலஜியும் இதுல இருக்கு சார்..." என்றார் தண்டபாணி
சற்றும் எதிர்பாராத வண்ணம்... சிறிதும் யோசிக்காமல்...
"வாயில தானே பேசணும்..." என கேட்டுவிட்டார் சுகவனம்
"சார்..." என்று திகைத்து நிறுத்தினார் தண்டபாணி
"இல்லப்பா... மனசுல நினைச்சாலே இதுவே கால் பண்ணி நினைக்கிறத.. நினைக்கிற ஆள்கிட்ட சொல்லிடுமோ!...
அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா.. குடும்பத்தில பிரச்னை ஆகிடும்பா...
வம்பை விலை கொடுத்து வாங்கினமாதிரி ஆகிடும்..."
"சரிங்க சார் உங்க பட்ஜெட்டை சொல்லுங்க... அதுக்கேத்தமாதிரி ஃபோனை காட்டுறேன்..." என்றார் தண்டபாணி
"ஹலோ... எனக்கேத்தமாதிரியான ஃபோனை நான்தான் செலக்ட் பண்ணனும்... நீங்க சொல்லக்கூடாது... புரியுதா..." என்றார் சற்றே கடினமான குரலில்...
தான் சரியாக 'தவறான' ஆளிடம் சிக்கியிருப்பது புரிய ஆரம்பித்தது தண்டபாணிக்கு...
மௌனமே சரியான வழி என நினைத்து அமைதியாக இருந்தார் தண்டபாணி...
"...இப்படியே எவ்ளோ நேரம்பா ரெண்டு பேரும் அமைதியா இருக்கிறது... நாம என்ன லவ்வர்ஸ் பார்க்லயா இருக்கோம்..." எனக் கூறி அங்கு நிலவியிருந்த அமைதியை மட்டுமல்லாமல் விற்பனையாளர் தண்டபாணியின் குழப்பத்தையும் கலைத்தார் சுகவனம்...
"முடிவா வாங்குற மாதிரி ஒரு விலையை சொல்லுப்பா..." என்றார் சுகவனம்...
"சார்... இது பிராண்டட் ஃபோன்... கடைசியா... 35800 ரூபாய் கொடுங்க சார்..." என்றார் தண்டபாணி
"என்னப்பா இது வாங்குற மாதிரி கேட்டா... " என இழுத்தர் சுகவனம்...
"சார்... ஃபுல் கேஷா இல்ல... இ.எம்.ஐ யா சார்..." எனக் கேட்டார் தண்டபாணி
"என்னப்பா நீ ஏதோ 1000... 2000... சொன்னா பரவாயில்ல...கேஷ் கொடுத்து வாங்கலாம்...
ஒரேயடியா என் ஒன்றரை மாச சம்பளத்தையே கேக்குறயேப்பா ...
இ.எம்.ஐ தான்..." என்றார் சுகவனம்
"சரிங்க சார் இனிஷியல் அமௌன்ட் எவ்ளோ கட்டறீங்க?..." என கேட்டார் தண்டபாணி...
"அதான் மாசாமாசம் இ.எம்.ஐ கட்டப்போறேனே... அப்புறம் எதுக்கு இனிஷியல் அமௌன்ட்...
நல்லா கேட்டுக்கோங்க...
என்னுடையது சேலரி அக்கௌன்ட்...
ரெண்டு செக் புக் அப்படியே இருக்கு... 100 செக் லீஃப் ...
இப்பவே கையெழுத்து போட்டு கொடுத்துடறேன்...
100 இ.எம்.ஐ எவ்ளோ வருதுன்னு உங்க அக்கவுண்ட்டண்ட் கிட்ட கேட்டு சொல்லுங்க... சீக்கிரம்...
35800 ரூபாய்ன்னா... மாசம் 385 ரூபாய் வரும்...
நானும் அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்ப்பேன்... " என்று பெருமிதமாக சொல்லி முடித்தார் சுகவனம்.
... ஒரு நிமிடம்... தண்டபாணியின் உடல், மனம் இரண்டும் முதல்முறையாக ஒரே நேரத்தில் ஸ்தம்பித்துப் போனது...
தான் கனவுலகத்தில்தான் இருக்கிறோம்... கடவுளே... இது நிஜம் அல்ல...
என தண்டபாணியின் மனம் நினைத்தது... "358 ரூபாய்" தண்டபாணியின் காதுகளுக்கும் மூளைக்கும் இடையே சிக்கி சுற்றிக்கொண்டிருந்தது....
இது கனவல்ல... நிஜம்... என்பது புரிய சில நொடிகள் ஆனது தண்டபாணிக்கு...
தண்டபாணியின் மனமும் உடலும் வழக்கம் போல் தனித்தனியாக செயல்பட ஆரம்பித்தது...
"சார் ஒரு நிமிஷம்... தண்ணி குடிச்சிட்டு வரேன்..." எனச் சொல்லி அவரிடமிருந்து விடுபட்டு சென்றார் தண்டபாணி...
நேரே மேனேஜர் அறைக்கு சென்ற தண்டபாணி... நடந்ததை மேனேஜரிடம் பரிதாபமாக சொன்னார்...
"என்ன தண்டபாணி... வந்திருக்கிற கஸ்டமரை சமாதானப்படுத்தி ஏதாவது வியாபாரம் பண்ணுவீங்களா... அத விட்டுட்டு என்கிட்டே வந்து கம்பிளைன்ட் பண்றீங்க..." என்ற மேனேஜர் தொடர்ந்து ...
"போங்க போயி... அந்த 3500 ரூபாய் விலையிலான ஃபோனை காட்டி முடிங்க... நமக்கும் அதுலதான் நல்ல மார்ஜின் கிடைக்கும்..." என முடித்தார்.
மேனேஜரிடம் உபதேசம் வாங்கிக்கொண்டு வெளியே வந்த தண்டபாணியை பார்த்த சுகவனம், தனக்காக ஏதோ பெரிய தள்ளுபடி விலையை தரப்போகிறார் என நினைத்து புன்னகைத்தார்.....
எப்படியும் இந்த ஆளிடம் ஏதாவது ஒரு ஃபோனை வியாபாரம் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன்...
சுகவனத்தின் சுய ரூபம் தெரியாத...தண்டபாணி அவரை நோக்கி லேசான புன்னகையுடன் வந்தார்...
தொடரும்....
No comments:
Post a Comment