Monday, 5 November 2018

மிஸ்டர் சுகவனம் - பாகம் 4

...அலுவலக அலப்பறைகள்


30 நிமிடம் கழிந்தது... கற்பனையிலிருந்து விடுபட்டு விழித்துக்கொண்டே தலையை சாய்த்தவாறு சரிந்திருந்தார் சுகவனம்...
மற்றுமொரு 10 நிமிடம் தான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்தார்...

"எழுந்துக்றோம்... ரிப்போர்ட்டை கொண்டு போய் டேபிள்ல போடறோம்... ராஜா மாதிரி திரும்பி வர்றோம்..." என்று தெளிவாக தன்னை தயார் செய்துகொண்டிருந்தார் சுகவனம்

வாழ்வில் நம் மனதை சில விஷயங்களுக்காக தயார் செய்துகொண்டிருக்கும் போது சம்பந்தமே இல்லாமல் யாரே ஒருவர் நமது சிந்தனையை கலைப்பார்... நமது மனமும் அவர் சுட்டிக்காட்டும் விஷயத்தில் லயிக்க ஆரம்பித்து நம் சிந்தனையை லேசாக விட்டுக்கொடுத்துவிடும்...


அவர் சிந்தனையில் இருக்கும் போது... இன்டர்காம் மணியடித்தது.... அவ்வளவுதான்....
எப்படியும் இது தனக்கான அழைப்பாகத்தான்  இருக்கும் என்று நினைத்து ரிப்போர்ட் பேப்பரை ஒரு கையில் எடுத்துக்கொண்டு... மறுகையில் ரிஸீவரை எடுத்தார்...

"எஸ் மேடம் என்று சொல்ல ஆரம்பித்தர்..." மறுமுனையிலிருந்து பேச ஆரம்பித்தது ஒரு ஆணின் குரல்...


"சார் இந்த மாசம் எத்தனை லீவ் வருதுன்னு சொல்ல முடியுமா" என கேட்டார் சபாபதி...
விடுமுறை என்றாலே சிறு பிள்ளை போல் சந்தோஷமாகிவிடுவார் சுகவனம்.

'அறிவிக்கப்பட்ட' + 'அறிவிக்கப்படாத' விடுமுறை + 'சுய' விடுப்பு என பல வகையிலும் விடுப்பு எடுக்க திட்டமிடுவார் சுகவனம்...

ஆனால் அவர் விடுப்பில் செல்லும் முன் நாள் வரையிலும்....
விடுப்பு எடுக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு வேலை செய்திருப்பாரோ அதை விட இரு மடங்கு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையை "சுயமாகவோ" அல்லது தனது "நலம் விரும்பிகள்" மூலமாகவோ அடைவார்....

"ச்சே.. இதுக்கு பேசாம லீவே எடுக்காம இருந்திருக்கலாம்..." என அலுத்துக்கொண்டுதான் அவர் விடுப்பில் செல்வார்...

விடுமுறை பற்றி சபாபதி நினைவுபடுத்தியதுதான் தாமதம்... ரஞ்சனி கேட்ட ரிப்போர்ட்டை சுத்தமாக மறந்தே போனார் சுகவனம்...

"தனது நேரத்தை" மறந்து நீண்ட நேரம் விடுமுறை பற்றி சபாபதியிடம் பேசிக்கொண்டிருந்தார் சுகவனம்.

ரஞ்சனியும் உணவு இடைவேளை முடிந்து சிறிது நேரம் வேறு விஷயங்களில் ஈடுபட்டிருந்துவிட்டு... திடீரென நினைவு வந்தது போல் சுகவனத்திற்கு இண்டர்காம் மூலம் அழைப்பு விடுக்க முயற்சித்தாள்... ம்ஹூம்... இண்டர்காம் பிஸி.... அடுத்தடுத்து முயற்சித்து பலனில்லாததால் ரஞ்சனியின் "பிளட் பிரஷர்" முறையான கால இடைவெளியோடு உயர்ந்துகொண்டிருந்தது...

தனக்கு நேர இருக்கும் அபாயத்தை அறியாமல் சபாபதியோடு உரையாடிக்கொண்டிருந்தார் சுகவனம்...

சபாபதிக்கு சூழ்நிலை நன்றாகவே தெரியும்...

இருப்பினும் சுகவனம் ரஞ்சனியிடம் சென்று தனது வேலையை முடித்துவிட்டால், அடுத்து தனக்கான வேலைதான் என்று தெரிந்திருந்ததால், சுகவனத்தை அவர் அறியா வண்ணம் தடுத்து நிறுத்தி வைத்திருந்தார்....

அலுவலகத்தில் தேநீர் நேரம் வந்ததை அறிந்த சபாபதி, சுகவனத்தை போனிலிருந்து விடுவித்தார்...

சுகவனத்தின் தேநீர் அவரது இருக்கைக்கு வந்தது...
கையில் வாங்கி உதட்டருகே கொண்டு சென்றார்...
அந்த நேரத்தில் எதிர்பாராவண்ணம் இண்டர்காம் மணியடித்தது...
வழக்கம் போல் அலறியடித்த சுகவனத்தின் மீது தேநீர் சிந்தியது...

"ச்சே.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல...."
தேநீரை மேஜை மீது வைத்துவிட்டு போனை எடுத்தார் சுகவனம்..

"வேர் இஸ் தி ரிப்போர்ட் சுகவனம்..."  என ரஞ்சனி கேட்டாள்
"கமிங் மேடம்...." என்று சுகவனம் சொல்லி முடிப்பதற்குள் ரஞ்சனி போனை வைத்துவிட்டாள்...

"ம்... பதில் சொல்றதுக்குள்ள வைச்சாச்சு..."
"என் வார்த்தைக்கு "எங்கேயும்" மரியாதை கிடையாது..."

"எங்கேயும்" என்ற வார்த்தை பிரத்தியேகமாக "வீட்டையே" குறிக்கும்...
அதைக் கேட்ட சபாபதி நமட்டாக சிரித்தார்...
ரவி = "நோ ரியாக்ஷன்" வழக்கம்போல....
 
"எனக்கு மட்டும் ஏன்டா இப்படி..." என்று சொல்லிக்கொண்டே ரிப்போர்ட் பேப்பரை எடுத்துக்கொண்டு, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ரவியின் கையை தட்டிவிட்டுச் சென்றார்...

வழக்கம் போல் ரிப்போர்ட்டை பார்த்ததும்... பொங்கி எழுந்த ரஞ்சனி 110 டெசிபலில் வார்த்தைகளை வீசினாள்... மூன்று முறை திருத்தங்களை சொல்லி... சுகவனத்தை செய்ய வைத்தாள்...

தானே அந்த ரிப்போர்ட்டை இறுதி செய்ததை நினைத்து தனக்கு தானே "குட்..." என்றாள் ....
தனக்குதான் சொல்கிறாள் என நினைத்து பெருமிதம் அடைந்தார் சுகவனம்....
சுகவனத்தின் எண்ணத்தை அறிந்துகொண்ட ரஞ்சனி சிரித்துவிட்டாள்...

அவ்வளவுதான் சுகவனம் பூரித்துப்போனார்...

ரஞ்சனியின் அறையிலிருந்து வெற்றிநடைபோட்டு  தனது இருக்கைக்கு வந்தார்...

"ப்பா... எதனை லட்சம்... ஜஸ்ட் கவனிக்கல... ஒரு வழியா முடிச்சாச்சு..." என்று ரவியிடம் சொன்னார்... ரவியோ தனது பார்வையை மட்டுமே பதிலாக சுகவனத்தை பார்த்தார்...

"ஏன்டா இப்படி வீட்ல இருக்கிற மாதிரியே.... எந்த ரியாக்ஷனும் இல்லாம உட்கார்ந்திருக்கே...

இது ஆபீஸ்டா....
பிரீயா இரு...

நான் என்ன உன் "மனைவியா ...."

பதில் பேசுனா நான் ஒன்னும் செய்யமாட்டேன் டா ...

சண்டை போட்ட கூட டிவேர்ஸ் பண்ண மாட்டேன்.... பண்ணவும் முடியாது...

.....தைரியமா பேசுடா ரவி...." (சற்றே அடங்கிய குரலில்)

 ரவியிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை...

"ம்ஹூம்....உன்ன பார்த்துட்டிருந்தா  நான் ரோபோட் மாதிரி ஆகிடுவேன்..."
 "டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்...." என்று
"அன்றைய சாதனையை" பெருமையோடு நினைத்துக்கொண்டே...
நேர் கொண்ட பார்வை... நிமிர்ந்த நன்நடையோடு... வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார் சுகவனம்

தொடரும்.... (....வீட்டில் சுகவனம்)


No comments:

Post a Comment