... சுகவனத்தின் (இல்)வாழ்க்கை
அடுத்த நாள் காலை தனது வீட்டிலிருந்து வாக்கிங் செல்ல தயாரான சுகவனத்தின் முன்... டம்பளரை கொண்டு நீட்டினாள் புவனா...
சற்றே தடுமாறிய சுகவனம் சுதாரித்துக்கொண்டு
"நான்தான் காபியை விட்டுட்டேனேம்மா..." என்றார்
"இது காபி இல்லைங்க...." என்றாள் புவனா
ஒரு நிமிட அமைதி.... (சுகவனத்தின் மனதிற்கு தவிர ...)
"அப்புறம்...." என்று இழுத்தார் சுகவனம்...
"குடிச்சிப்பாருங்க..." என்றாள் புவனா புன்னகையோடு....
புவனாவின் சிரித்த முகம் சுகவனத்திற்கு மிகவும் பிடிக்கும்....
அடிக்கடி, "இந்தச் சிரிப்புதான்..." என புகழ்வார்...
புவனா எவ்வளவு கோபப்பட்டாலும் இதுபோன்று ஏதாவது சொல்லி புவனாவை வெட்கப்பட வைத்துவிடுவார்...
புவனாவின் சிரிப்பை பார்த்ததும்....
- பட்ட காலிலேயே படும்... சுகவனத்தின் நிலை ...
- நாய் வாலை நிமிர்த்த முடியாது.... சுகவனம் மனதின் நிலை...
சரி தனக்காக ஏதோ புதிதாக செய்திருக்கிறாள் போல என நினைத்து... காபி அனுபவத்தை மறந்து...
"இது நல்ல ருசியாக இருக்குமா?... "
"இல்ல எனக்கு பிடிச்ச மாதிரி காபிபோட்டிருப்பாளோ?..." என்ற ஆவலுடன் டம்பளரை வாங்கினார்....
டி.வி.யில் அதிகாலை பக்தி பாடல் ஓடிக்கொண்டிருந்தது... அதை பார்த்துக்கொண்டே பருக ஆரம்பித்தார்...
"... இது என்ன பால் பாயசம் மாதிரி இருக்கு... ஆனா வேற கலர்ல வேற ஏதோ கலந்திருக்குற மாதிரி இருக்கே..." என்று யோசிக்கும்போதே...
டி.வி.யில் விளம்பரம் வந்தது...
"இதுலே அதிமதுரம், வேம்பு, சுக்கு, மிளகு..... ஆயுர்வேத பொருட்கள் எல்லாம் கலந்திருக்கறதாலே...." என்று ஒரு வயதான பெண்மணி மூக்கடைத்த குரலில் சொல்லிக்கொண்டே இளம் பெண்ணிடம் கொடுக்கிறார்....
சட்டென சுகவனத்திற்கு உரைத்தது...
"அடச்சே... மசாலா டீயா... நல்ல வேலை பாயசம்னு சொல்லி மாட்டியிருப்போம்... "
"அடப்பாவிங்களா மருந்து வேணும்னா நேரடியா தேன் கலந்து சாப்பிடவேண்டியதுதானே... அதை ஏன்டா டீயில கலந்து எங்களை படுத்துறீங்க.... இத கண்டுபிடிச்சவன கூட்டிட்டு வந்து அவனேயே குடிக்கவெக்கணும்..." என்று மனதிற்குள்ளேயே கடிந்துகொண்டார்...
நிமிர்ந்து புவனாவை பார்த்து... "மசாலா டீயா..மா... (சிறு இடைவெளிவிட்டு) நல்லாயிருக்கு..." என முடித்தார்.
"ஆனா பித்தம் இருக்கறதால டீ, காபி எல்லாம் குடிச்சா, கை காலெல்லாம் 'எரியும்'...." என்று 'எரியும்' என்பதை அழுத்தமாகவே சொன்னார்...
"வெறும் தண்ணி போதும்மா.... வேணும்னா கொஞ்சம் சூடு பண்ணி கொடு...
ம்... அது வேற... இப்ப எல்லாமே ஆர்.ஓ. வாட்டர்...
ஒருத்தன் சூடு பண்ணலாம்னு சொல்றான்...
ஒருத்தன் கூடாதுன்னு சொல்றான்...
எதுக்கும் கொஞ்சம் லேசா சூடானதும் இறக்கிடு... அது போதும்..."
"அப்பாடா இனிமே தப்பிச்சோம்" என நினைத்து தப்பு கணக்கு போட்டுவிட்டார் சுகவனம்.
... அடுத்தநாள் காலை.... வாக்கிங் செல்ல தயாரான சுகவனத்தின் முன்... டம்பளரை கொண்டு நீட்டினாள் புவனா...
வெதுவெதுப்பான தண்ணீர் என நம்பி, கையில் வாங்கியதும், எந்த யோசனையும் செய்யாமல் வாயில் வைத்து உறிஞ்சிவிட்டார்... அவருடைய நம்பிக்கை தவிடுபொடியானது...
நாக்கில் ஏற்பட்ட லேசான காரம் திடீரென விஸ்வரூபம் கொண்டு தொண்டையை கவ்வியது... எதிர்பாராத இந்த தாக்குதலால் அவரது கண்களின் பார்வை ஒரு நொடி இருண்டு போனது... ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட சுகவனத்திற்கு பயம் இரு மடங்கானது...
உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது....
"ப்பா... பித்தமெல்லாம் வியர்வை மூலமா எப்படி வெளியேறுது பாருங்க..." என்றாள் புவனா... பெருமிதமாக....
"அடிப்பாவி உடம்பு மட்டுமா வேர்த்திருக்கு... கண்கள் கூடத்தான் வேர்த்திருக்கு... அது தெரியலையா...ம்..." என நினைத்துக்கொண்டு பேசா மடந்தையாக நின்றிருந்தார் சுகவனம்...
"இதுல என்ன கலந்திருக்கேன்னு கண்டுபிடிச்சிடீங்களா..." என்று புன்னகை பூத்தாள் புவனா...
எப்படியும் தனக்கு தோல்வி மட்டுமே நிச்சயம் என்ற தீர்க்கமான நம்பிக்கை ஏற்பட்டது சுகவனத்திற்கு...
சிரமப்பட்டு "என்னம்மா... சேர்த்திருக்க... இதுல..." என்றார்
சந்தோஷ மிகுதியுடன் பேச ஆரம்பித்தாள் புவனா...
"உங்களுக்கு பித்தம்னு சொன்னீங்கள்ல..." என்றாள் புவனா...
"அதான் தலைப்புச் செய்தி மாதிரி தினமும் காலையிலே சொல்லிட்டிருக்கேனே... அதுக்கென்ன...." என்றார் சுகவனம் அலுப்புடன்...
"அதான் நேத்து எங்க அம்மாகிட்ட போன்ல பேசும்போது ஏதாவது கை வைத்தியம் இருந்தா சொல்லும்மான்னு கேட்டு உங்களுக்கு வச்சு கொடுத்தேன்... பாருங்க உடம்புல இருக்குற பித்தமெல்லாம் வியர்வையா வெளியேறுது பாருங்க..." என்றாள்...
"இந்த மாதிரி "வச்சு" கொடுத்தா பித்தம் மட்டுமில்லம்மா மொத்தம் வெளியேறிடும்...அப்புறம் ஒன்னும் இருக்காது..." என்று தத்துவார்த்தமாக பேசினார் சுகவனம் ...
"போன்ல பேசும்போது" என்று புவனா சொன்னது மட்டும் சுகவனத்தின் காதுகளில் திரும்ப திரும்ப கேட்டது...
"நேத்து டி.வி. விளம்பரம், இன்னைக்கு போன்... ச்..சே... "
...ஒட்டுமொத்த டெக்னாலஜியும் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்து பெருமூச்சு விட்டார் சுகவனம்...
"அடடா... இப்படி ஒரு அரைகுறை பித்த வைத்திய குடும்பத்திலா நம்ம பொண்ணு கட்டியிருக்கோம்...
போட்டோ காட்டும்போது ஒண்ணுமே சொல்லலியே...
ஏழு பொண்ணு அமையலேன்னு நம்ம அப்பா அம்மாவே நம்மள இப்படி வச்சு செஞ்சிட்டாங்களோ... ம்... இதுக்கு மேல ஒன்னும் பண்ணமுடியாது...
இதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு... பார்ப்போம்...
ஆனாளப்பட்ட ரஞ்சனியவே ஆபீஸ்ல சமாளிக்கிறோம்... வீட்லயும் சமாளிப்போம்... " என்ற முடிவுக்கு வந்தார் சுகவனம்...
.....கீழே விழுவது போன்ற ஒரு உணர்வு...
திடீரென விழிப்பு நிலையை எய்தினார் சுகவனம்...
"அட..ச்...சே... இதையெல்லாம் மறக்கவும் முடியல...
நினைக்காம இருக்கவும் முடியல...
விடிஞ்சா என்ன நடக்கும்னு தெரியல... ச்.. சே... நித்ய கண்டம் பூர்ண ஆயுசு மாதிரி ஆகிடுச்சே..." என நினைத்துக்கொண்டே...
கடிகாரத்தில் மணி பார்த்தார் ஒன்றுமே தெரியவில்லை...
ஒரு க்ஷணம் பதற்றமடைந்த சுகவனம்...
தனக்கு ஏதோ ஆகிவிட்டது என எண்ணி பயந்தார்...
"ச்.சே... கண்ணாடி போடலயா..." என சுதாரித்துக்கொண்டு...
கண்ணாடி அணிந்து பார்த்தார்... மணி 11.00 ஆகியிருந்தது...
"11.00 தானா... ரொம்ப நேரமான மாதிரி இருக்கே... ம்... இதையெல்லாம் நெனைச்சிட்டிருந்தா... இப்படித்தான்...
இனிமேலயாவது நிம்மதியான தூக்கம் வருதான்னு பார்ப்போம்...
.... மீண்டும் உறக்கத்திற்கு சென்றார் சுகவனம்...
தொடரும்...
This character has a resemblance to every married man, Choks the going is good
ReplyDeletewarm tea at this winter...............
ReplyDelete